சிட்லபாக்கத்தில் 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி - பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்


சிட்லபாக்கத்தில் 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி - பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 4 Sept 2019 4:15 AM IST (Updated: 4 Sept 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த சிட்லபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியையெட்டி 12 ஆயிரம் விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி தொடங்கியது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதாநகர் கிருஷ்ணமாச்சாரி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். கட்டிடக்கலை நிபுணரான இவர், தீவிர விநாயகர் பக்தர். கடந்த 12 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளுடன் கண்காட்சி நடத்தி வருகிறார்.

தற்போது 13-ம் ஆண்டாக விநாயகர் சதுர்த்தியையொட்டி சிட்லபாக்கம் காந்தி தெரு ஸ்ரீலட்சுமி ராம் கணேஷ் மகாலில் விநாயகர் சிலை கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியில் 12 ஆயிரம் விநாயகர் சிலைகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு கண்காட்சியில் புதிய விநாயகர் சிலைகள் இடம்பெற்று உள்ளன. குறிப்பாக 7½ அடி உயரத்தில் அத்திமரத்தில் செய்யப்பட்ட ‘அத்திவரதர்’ விநாயகர் சிலை வைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ஸ்கூட்டர் ஓட்டும் விநாயகர், சயன கோலத்தில் பல்வேறு வடிவங்களில் 200 விநாயகர் சிலைகளும் கண்காட்சியில் இடம்பெற்று உள்ளன.

சுமார் 5 அடி உயர தங்க நிற யானையில் பவனி வரும் விநாயகர், வெள்ளி நிற யானையில் சிவனுக்கு பூஜை செய்யும் விநாயகர், விநாயகர் அலங்கார சிலைகள், சந்தனத்தில் செய்யப்பட்ட விநாயகர், கண்ணாடி மாளிகையில் விநாயகர், படகு ஓட்டும் விநாயகர், விநாயகர் திருக்கல்யாணம், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகர் சிலைகள், முருகன், பார்வதியுடன் பல்வேறு வாகனங்களில் செல்லும் விநாயகர் சிலைகள், வனத்தில் இருக்கும் விநாயகர் என பல்வேறு வகைகளான விநாயகர் சிலைகள், விநாயகரின் அபூர்வ புகைப்படங்கள், வெளிநாடுகளில் உள்ள விநாயகர் கோவில்களின் படங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

விநாயகர் சிலை கண்காட்சியை சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறுவர்கள், பெண்கள் என ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.

இது தொடர்பாக கண்காட்சி அமைப்பாளர் சீனிவாசன் கூறும்போது, “விநாயகர் சிலைகள் கண்காட்சி வருகிற 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கண்காட்சியை பார்வையிடலாம்” என்றார்.

Next Story