அன்னவாசல் அருகே அரசு வேளாண்மை கல்லூரியில், கான்கிரீட் சரிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் படுகாயம்


அன்னவாசல் அருகே அரசு வேளாண்மை கல்லூரியில், கான்கிரீட் சரிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 4 Sept 2019 4:00 AM IST (Updated: 4 Sept 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

அன்னவாசல் அருகே உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் கான்கிரீட் சாரத்துடன் சரிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலை அண்ணா பண்ணையில் அரசு வேளாண்மை கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான கான்கிரீட் போடும் பணியில் நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சாரத்துடன் கான்கிரீட் சரிந்து விழுந்தது.

இதில் கட்டுமான தொழிலாளர்கள் விசலூரை சேர்ந்த பாண்டி (வயது 46), மாம்பட்டியை சேர்ந்த நல்லுசாமி (40), பாலசுப்பிரமணியன் (32), குடுமியான்மலையை சேர்ந்த பொன்னுசாமி (49) உள்பட 8 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 4 பேரை அங்கிருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவ மனைக்கும், மற்ற 4 பேரையும் புதுக்கோட்டையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு வேளாண்மை கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணியின் போது கான்கிரீட் சாரத்துடன் சரிந்து விழுந்து 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு வேளாண்மை கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகள் தரமான முறையில் நடைபெறுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Next Story