வனப்பகுதியின் விதிமுறை தளர்த்தப்பட உள்ளதால் புதிய கல் குவாரிகள் அமைக்க பட்டியல் தயாரிப்பு


வனப்பகுதியின் விதிமுறை தளர்த்தப்பட உள்ளதால் புதிய கல் குவாரிகள் அமைக்க பட்டியல் தயாரிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2019 4:00 AM IST (Updated: 4 Sept 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

வனப்பகுதியின் விதிமுறை தளர்த்தப்பட உள்ளதால் புதிய கல் குவாரிகள் அமைக்க பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை, டி.என்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. வனப்பகுதியையொட்டி உள்ள கல் குவாரிகளால் வனவிலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுவதாகவும், மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்கள். இதன் காரணமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் குவாரிகள் செயல்பட இடைக்காலத்தடை விதித்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதன் காரணமாக பல கல் குவாரிகள் மூடப்பட்டன.

இந்தநிலையில் வனப்பகுதியின் விதிமுறைகளை தளர்த்துவதற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கல் குவாரிகள் அமைக்க அனுமதி வழங்கும் வகையில் உள்ள இடங்களின் பட்டியலை கனிம வளத்துறையினர் தயாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஈரோடு கனிமவளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கல் குவாரிகள் அமைக்கக்கூடாது என்கிற விதிமுறை உள்ளது. தற்போது இந்த விதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கான வரைவு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி வனப்பகுதியையொட்டி தற்போது 10 கிலோ மீட்டர் தூரத்தில் குவாரிகள் அமைக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு பதிலாக ஒரு கிலோ மீட்டர் தூரமாக மாற்றி அமைக்கப்படுகிறது. தற்போதைய காலத்தில் சுற்றுச்சூழலுக்கு அதிகமான பாதிப்புகள் இல்லாமல் நவீன முறையில் வெடி வைப்பது, தூசி பறக்காமல் கற்களை வெட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி கல் குவாரிகளுக்கு தகுதியான இடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரைவு அறிக்கை முறையாக அமலுக்கு வரும் வரை பழைய முறை பின்பற்றப்படும்.

சென்னம்பட்டி பகுதியில் 4 குவாரிகள் புதிதாக செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story