அரசு விளையாட்டு அரங்கில் மாணவர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூல்; நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் சங்கம் கலெக்டரிடம் மனு


அரசு விளையாட்டு அரங்கில் மாணவர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூல்; நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் சங்கம் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 4 Sept 2019 3:45 AM IST (Updated: 4 Sept 2019 3:43 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் உள்ள அரசு விளையாட்டு அரங்கில், விளையாட்டு பயிற்சிகளை பெற வரும் பள்ளி மாணவர்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கம் கலெக்டரிடம் மனு வழங்கி வலியுறுத்தியுள்ளது.

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத் தலைவர் வின்சென்ட் தலைமையில், நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜாவை நேரில் சந்தித்து ஓர் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

காரைக்கால் அரசு விளையாட்டு அரங்கத்துக்குப் பொறுப்பாளராக உள்ள அதிகாரி, அரங்கில் பயிற்சி பெற வரும் மாணவர்களிடத்தில் எந்தவொரு அரசு உத்தரவும் இல்லாமல், ரூ.800, ரூ.1,000 என பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கிறார். இதனால், ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பயிற்சியும் தகுதியானவர்களைக் கொண்டு அளிப்பதில்லை. மாத சந்தா என்ற முறையில் மாணவர்களிடம் ரூ.1,500 வசூலிப்பதுடன், கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி மற்றும் குறுகிய கால பயிற்சி என விளம்பரம் செய்துகொண்டு, அரசு விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்தி, லாபம் ஈட்டுகின்றார்.

அரசு விளையாட்டு அரங்கம் என்பது இலவசமாக பயிற்சி பெற அல்லது அரசு நிர்ணயித்த குறைந்த கட்டணத்தை செலுத்தி பயிற்சி பெறுவதற்கானதாக இருக்கவேண்டும். ஆனால், காரைக்கால் விளையாட்டு அரங்கம் என்பது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, அவரவர்கள் கட்டணத்தை நிர்ணயித்துக்கொண்டு பயிற்சி தருவதால், ஏழை, நடுத்தர மாணவர்களுக்கு விளையாட்டு அரங்கம் என்பது காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது.

எனவே, விளையாட்டு அரங்கத்தில் தேவையான வசதிகளை அரசு செய்யவேண்டும். பயிற்சி அளிப்போர் சுய லாபம் அடையும் வகையில் அங்கு பயிற்சி அளிக்க அனுமதிக்கக்கூடாது. கடுமையான கட்டுப்பாடுகள், கண்காணிப்புகள், தணிக்கை முறைகளை அரசு நிர்வாகம் செய்யவேண்டும். விளையாட்டு ஊக்குவிப்பு என்ற பெயரில் சிலர் கொள்ளை லாபம் பெற அரசு விளையாட்டு அரங்கம் பயன்படுவது வேதனையளிக்கிறது. எனவே, விளையாட்டு அரங்க பொறுப்பாளர், பயிற்சியாளர்கள் பணிகளை ஆய்வு செய்து, அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் முன்வரவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story