புதுவை போக்குவரத்து துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சோதனை


புதுவை போக்குவரத்து துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சோதனை
x
தினத்தந்தி 4 Sept 2019 4:30 AM IST (Updated: 4 Sept 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

புதுவை போக்குவரத்து துறை அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தினார்கள்.

புதுச்சேரி,

ஊழலை ஒழிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி புதுச்சேரி உள்பட தமிழகத்தில் சென்னை, மதுரை, பெங்களூரு உள்பட 150 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

புதுச்சேரி சாரத்தில் உள்ள பத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகங்கள், உழவர்கரை மற்றும் வில்லியனூர் சார்பதிவாளர்கள் அலுவலகம், புதுவை நூறடி சாலையில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகம், கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. அப்போது நடந்த சோதனையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி நூறடி சாலையில் உள்ள போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று மீண்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவர்கள் அங்கு பணியில் இருந்து அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் சில முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை அமலாபால் தனக்கு சொந்தமான காரை புதுவையில் பதிவு செய்தது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

Next Story