சட்டசபை துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கிறது - சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவிப்பு


சட்டசபை துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கிறது - சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2019 5:00 AM IST (Updated: 4 Sept 2019 4:32 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டசபை துணை சபாநாயகர் தேர்தல் நாளை நடக்கிறது என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபை சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வசதியாக தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து துணை சபாநாயகராக இருந்த சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்வானார்.

இந்தநிலையில் அவர் வகித்து வந்த துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. அந்த பதவிக்கு இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று சட்டசபையில் பூஜ்ய நேரம் முடிந்ததும் துணை சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பினை சபாநாயகர் சிவக்கொழுந்து வெளியிட்டார். அப்போது அவர், 5-ந்தேதி (நாளை- வியாழக்கிழமை) துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.

அப்போது எழுந்த அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன், இந்த தேர்தலை எப்படி நடத்தப்போகிறீர்கள்? ரகசிய வாக்கெடுப்பா? டிவிசன் வாக்கெடுப்பா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற விதிகளின்படி தேர்தல் நடக்கும் என்றார். அதன்பின் பேசிய அன்பழகன் எம்.எல்.ஏ., இது நல்ல அரசாக இருந்தால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தரவேண்டும் என்றார்.

இந்தநிலையில் புதுவை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை சட்டப்பேரவை நடைமுறை மற்றும் அலுவல் நடத்தை விதிகளின் 10-வது துணை விதி (1)-ஐ பின்பற்றி சபாநாயகர் 5-ந்தேதியை பேரவை துணைத்தலைவருக்கான (துணை சபாநாயகர்) தேர்தல் நடத்தும் தேதியாக நிர்ணயித்துள்ளார்.

மேற்கண்ட நடைமுறை விதிகளின் 10-வது விதியின் துணை விதி (2)-ன்கீழ் 4-ந்தேதி (இன்று- புதன் கிழமை) பகல் 12 மணிக்கு முன்னர் எந்த உறுப்பினரேனும் முன்மொழிபவர் என்ற முறையில் அவரும் வழிமொழிபவர் என்ற முறையில் 3-வது உறுப்பினர் ஒருவரும் கையெழுத்திட்டு ஒரு நியமன சீட்டை புதுவை சட்டசபை செயலாளரிடம் கொடுப்பதன் மூலம் இன்னோர் உறுப்பினரை தேர்தலுக்கென நியமனம் செய்யும் பிரேரணைக்கான அறிவிப்பு தரலாம்.

இந்த நியமன சீட்டு நியமிக்கப்பட்ட உறுப்பினரின் பெயரை கொண்டிருப்பதுடன் முன்மொழியப்பட்ட உறுப்பினர் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் பேரவை துணைத்தலைவராக சம்மதம் என எழுதிக்கொடுத்த அறிவிப்பு ஒன்றும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் ஓர் உறுப்பினர் தன்னுடைய பெயரை முன்மொழியவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிரேரணைகளை முன்மொழியவோ அல்லது வழிமொழியவோ கூடாது. நியமன சீட்டு படிவத்தை உறுப்பினர்கள் சட்டப்பேரவை செயலாளரிடமிருந்து அவரது அலுவலக நேரத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் தெரிவித்துள்ளார்.

துணை சபாநாயகர் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ. போட்டியிட உள்ளார். ஆனால் எதிர்க்கட்சிகள் சார்பில் யார் போட்டியிட உள்ளார்? என்பதை எதிர்க்கட்சிகள் அறிவிக்கவில்லை. அவ்வாறு யாரும் போட்டியிடவில்லை என்றால் எம்.என்.ஆர்.பாலன் போட்டியின்று தேர்வு செய்யப்படுவார். அதுகுறித்த விவரங்கள் இன்று (புதன்கிழமை) 12 மணிக்கு தெரிந்துவிடும்.

Next Story