திருப்பூரில் ஜெராக்ஸ் கடை உரிமையாளரின் புதிய ஸ்கூட்டரை திருடி சென்ற வாலிபர்; கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை


திருப்பூரில் ஜெராக்ஸ் கடை உரிமையாளரின் புதிய ஸ்கூட்டரை திருடி சென்ற வாலிபர்; கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை
x
தினத்தந்தி 5 Sept 2019 5:00 AM IST (Updated: 4 Sept 2019 11:09 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஜெராக்ஸ் கடை உரிமையாளரின் புதிய ஸ்கூட்டரை வாலிபர் ஒருவர் திருடி சென்றார். ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் குமரன் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிமாறன்(வயது 50). இவர் டவுன்ஹால் முன்புறம் ஜெராக்ஸ் கடை வைத்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மணிமாறன் புதிய ஸ்கூட்டரை வாங்கியிருந்தார். நேற்று காலை 7¾ மணிக்கு அவர் தனது ஸ்கூட்டரில் ஜெராக்ஸ் கடையை திறக்க வந்தார். கடைக்கு முன்பு சாவியுடன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு கடையை திறந்து மணிமாறன் கடைக்குள் சென்றார்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணாதது கண்டு மணிமாறன் அதிர்ச்சி அடைந்தார். மர்ம ஆசாமி ஸ்கூட்டரை திருடிச்சென்றது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் மணிமாறன் புகார் அளித்தார். போலீசார் விரைந்து சென்று ஜெராக்ஸ் கடைக்கு முன்பு பொருத்தியிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர்.

வீடியோவில், மணிமாறன் தனது ஸ்கூட்டரை சாவியுடன் நிறுத்தி விட்டு கடைக்குள் சென்றதும், 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் செல்போனில் பேசியபடி ரோட்டில் நடந்து செல்கிறார். சாவியுடன் ஸ்கூட்டர் இருப்பதை கவனித்த அவர் சிறிது தூரம் சென்று நின்றுகொண்டு ஆட்களை நோட்டமிடுகிறார். பின்னர் மீண்டும் ஸ்கூட்டரை நோக்கி நடந்து வந்து சாவியை திருக்கி ஸ்கூட்டரை ஓட்டிச்சென்று மறைந்து விடுகிறார்.

இந்த காட்சியை கைப்பற்றி போலீசார் அந்த ஆசாமியை தேடி வருகிறார்கள். மேலும் ஸ்கூட்டரின் பதிவு எண் உள்ளிட்ட அடையாளத்தை மாநகரில் சோதனை சாவடிகளில் உள்ள போலீசாரிடம் தெரிவித்து தேடி வருகிறார்கள். வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரை திருடிச்சென்ற வீடியோ காட்சிகள் நேற்று திருப்பூர் மக்களிடம் வாட்ஸ்அப், முகநூல் மூலமாக அதிகமாக பகிரப்பட்டது.

Next Story