சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடி சுழல்நிதி கடன் வழங்கப்பட்டுள்ளது - மாவட்ட நிர்வாகம் தகவல்


சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.1 கோடி சுழல்நிதி கடன் வழங்கப்பட்டுள்ளது - மாவட்ட நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 5 Sept 2019 4:15 AM IST (Updated: 4 Sept 2019 11:58 PM IST)
t-max-icont-min-icon

சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி கடனாக ரூ.1 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிவகங்கை,

மாவட்ட மகளிர் திட்டத்துறையின் ஆய்வுக் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அதில் கலெக்டர் பேசியதாவது:- தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்துறையின் மூலம் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கு பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து திட்டங்கள் வடிவமைத்து செயல்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது இந்த திட்டத்தின் வடிவமைப்பு அறிக்கை தயாரிப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்துடன் வேளாண்மைத்துறை, மாவட்ட தொழில் மையம், கால்நடைப் பராமரிப்புத்துறை, தாட்கோ, நபார்டு வங்கி, முன்னோடி வங்கி, வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையம், பட்டு வளர்ப்புத்துறை ஆகியத்துறைகள் ஒருங்கிணைந்து தனிநபரின் பொருளாதார முன்னேற்றத்திற்கு எந்த வகையில் திட்டங்களை செயல்படுத்தினால் எளிதாக இருக்கும் என்பதை திட்டமிட்டு செயல்பட வேண்டும். அந்த வகையில் ஒவ்வொரு துறையும் எந்தந்தப் பகுதியில் எந்தந்த திட்டம் தேவை என்பதை முதலில் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக, மகளிர் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஊராட்சியிலும் 15 குழுக்களுக்கு மேல் தேர்வு செய்யப்பட்டு சுழல்நிதி கடனாக சுமார் ரூ.1 கோடிக்கு மேல் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

அதை மேலும் விரிவுபடுத்தும் வண்ணமும், குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் பெறவும் அனைத்துத்துறை ஒருங்கிணைப்புடன் மக்களின் தேவையை அறிந்து பட்டியலிட்டு அதன்படி தேவைக்கேற்ப உதவிகளை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப வேளாண்மைத்துறையிலுள்ள தோட்டக்கலைத்துறை மற்றும் பொறியியல்துறை ஆகியத்துறைகள், குழுக்களின் முன்னேற்றத்திற்கு தங்கள் துறையின் மூலம் எந்த வகையில் உதவிடலாம் என்பதை கணக்கிட வேண்டும்.

அதேபோல் கால்நடைப் பராமாரிப்புத்துறை கிராமப்பகுதிகளில் கறவைமாடுகள், ஆடுகள் வளர்ப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி மற்றும் தீவனம் வழங்குதல் குறித்து திட்டமிடுதல் வேண்டும். அதேபோல் பட்டுவளர்ப்புத்துறை, குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.

இதேபோல் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை ஒருங்கிணைந்து செயல்பட்டு தொழில் முனைவோருக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும். இவற்றுடன் ஒருங்கிணைந்து மாவட்ட முன்னோடி வங்கி, நபார்டு வங்கிகள் ஒருங்கிணைந்து நிதியுதவிகளுக்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story