மாத்தூர், குன்னத்தூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன
மாத்தூர், குன்னத்தூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து சென்று காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
விராலிமலை,
புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் அண்ணா நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவில் அருகே சதுர்த்தியை முன்னிட்டு 5 அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து கற்பக விநாயகருக்கு அபிஷேக, ஆராதனையும், பிரதிஷ்டை செய்யப்பட்ட 5 அடி விநாயகருக்கு சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் அப்பகுதியில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக விநாயகருக்கு காலை, மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சரக்கு வேனில் விநாயகர் சிலையை வைத்து ஊர்வலமாக மாத்தூரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக கொண்டு சென்றனர். அப்போது பக்தர்கள் தங்களது வீடுகளுக்கு முன்பு தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர். இதில் மாத்தூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கலைச்செல்வி தர்மராஜ், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதி அய்யாவு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேபோல மாத்தூர் விவேகானந்தா நகர், இறைவன் நகர் ஆகிய பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, சுந்தரராஜ், பாலாஜி ஆகியோர் ஏற்பாட்டில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து பூஜை செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் சிலையை சரக்கு வேனில் ஏற்றி ஊர்வலமாக கொண்டு சென்றனர். இதையடுத்து 3 விநாயகர் சிலைகளும் குண்டூர் விமானநிலையம், திருச்சி வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக காவிரி ஆற்றிற்கு எடுத்து வரப் பட்டது. பின்னர் ஆற்றில் 3 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.
இதேபோல சூரியூர், குன்னத்தூர், மதயானைப்பட்டி, எழுவம்பட்டி, தொண்டைமான்நல்லூர், செங்களூர், மண்டையூர், ஆலங்குடி, நீர்பழனி, அவ்வையார்பட்டி, மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story