கனமழையால் முடங்கிய ரெயில் சேவை: இரவில் வீடு திரும்ப முடியாமல் பரிதவித்த பயணிகள்


கனமழையால் முடங்கிய ரெயில் சேவை: இரவில் வீடு திரும்ப முடியாமல் பரிதவித்த பயணிகள்
x
தினத்தந்தி 5 Sept 2019 5:30 AM IST (Updated: 5 Sept 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

கனமழையால் மும்பையில் ரெயில் சேவை முடங்கியதால் இரவில் வீடு திரும்ப முடியாமல் பரிதவித்த பயணிகளுக்கு 145 மாநகராட்சி பள்ளிகளில் தற்காலிக முகாம்கள் திறக்கப்பட்டன.

மும்பை, 

மும்பையில் நேற்று கொட்டி தீர்த்த கனமழை இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது. நகரின் போக்குவரத்து உயிர்துடிப்பான புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்து அடியோடு முடங்கியது. தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்ததால் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. மத்திய ரெயில்வே வழித்தடத்தில் பாண்டுப், மான்கூர்டு, விக்ரோலி, காட்கோபர், வித்யாவிகார், குர்லா ஆகிய இடங்களிலும், மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மாகிம்- மாட்டுங்கா ரோடு ரெயில் நிலையங்களுக்கு இடையேயும் தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்தது.

இதன் காரணமாக மின்சார ரெயில்கள் ஆங்காங்கே நடு வழியில் நின்றன.

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - தானே இடையேயும், துறைமுக வழித்தடத்தில் சி.எஸ்.எம்.டி. - வாஷி இடையேயும், மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மாட்டுங்கா ரோடு ரெயில் நிலைய பகுதியில் சர்ச்கேட்-வசாய் ரோடு இடையேயும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. மழையின் பிடியில் இருந்து இரவு வரையிலும் ரெயில் போக்குவரத்து மீளவில்லை. இதன் காரணமாக இரவில் பயணிகள் ரெயில் நிலையங்களில் பரிதவித்தனர்.

சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் ரெயில் நிலைய அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரெயில்வேக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பல்வேறு ரெயில் நிலையங்களிலும் இதேபோல பயணிகள் போராட்டங்கள் நடத்தினர். இதனால் ரெயில் நிலையங்களில் பரபரப்பு உண்டானது.

இந்த நிலையில், ரெயில் நிலையங்களில் பரிதவித்த பயணிகள் மற்றும் நடுவழியில் சிக்கிய பயணிகள் தங்குவதற்கு வசதியாக மும்பை மாநகராட்சி தனது 145 பள்ளிகளில் தற்காலிக முகாம் திறந்தது. அங்கு பயணிகளுக்காக தண்ணீர், பாய், இருக்கை உள்ளிட்ட அத்தியாவசிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன.

Next Story