காங்கிரஸ் மூத்த தலைவர் கிருபாசங்கர் சிங் வீட்டுக்கு முதல்-மந்திரி, உத்தவ் தாக்கரே திடீர் வருகை
காங்கிரஸ் மூத்த தலைவர் கிருபாசங்கர் சிங் வீட்டுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் திடீரென வந்ததால் அரசியல் அரங்கில் பரபரப்பு உண்டானது.
மும்பை,
மும்பையை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் கிருபாசங்கர் சிங். மறைந்த முன்னாள் முதல்-மந்திரி விலாஸ்ராவ் தேஷ்முக் மந்திரிசபையில் இடம் பெற்றிருந்த இவர், வட இந்தியர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தலைவராக விளங்கினார்.
கடந்த 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தோல்வி மற்றும் மும்பை காங்கிரசில் சஞ்சய் நிருபத்தின் எழுச்சி ஆகியவற்றின் காரணமாக கிருபாசங்கர் சிங்கின் செல்வாக்கு வட இந்தியர்கள் மத்தியில் குறைந்தது. இந்தநிலையில், அவர் காங்கிரசில் இருந்து விலகும் முடிவில் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் கிருபாசங்கர் சிங் தனது மனைவியை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி கிருபாசங்கர் சிங் தனது வீட்டில் விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்.
இந்தநிலையில், நேற்றுமுன்தினம் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கிருபாசங்கர் சிங் வீட்டுக்கு திடீரென தனித்தனியாக வருகை தந்து, அவரது வீட்டில் உள்ள விநாயகர் சிலையை தரிசனம் செய்தனர்.
மூத்த காங்கிரஸ் தலைவர் வீட்டுக்கு வந்து முதல்-மந்திரி பட்னாவிஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தரிசனம் செய்திருப்பது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பா.ஜனதா, சிவசேனாவில் ஐக்கியமாகி வரும் நிலையில் கிருபாசங்கரின் வீட்டுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், உத்தவ் தாக்கரேயின் வருகை கிருபாசங்கர் சிங் கட்சி மாறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
Related Tags :
Next Story