கோபி அருகே வேதபாறை அணை கட்டப்படும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு


கோபி அருகே வேதபாறை அணை கட்டப்படும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 5 Sept 2019 3:30 AM IST (Updated: 5 Sept 2019 1:43 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே வேதபாறை அணை கட்டப்படும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

டி.என்.பாளையம்,

கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் மலையடிவாரத்தில் வேதபாறை என்ற இடத்தில் 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் செல்கிறது. வனப்பகுதியில் மழை பெய்யும்போது இந்த காட்டாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி பவானி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் தண்ணீர் வீணாகி வருகிறது.

எனவே வேதபாறையில் வீணாகும் மழைநீரை சேமித்து வைக்க வேதபாறையில் அணை கட்ட வேண்டும் என்று கடந்த 45 ஆண்டுகளாக கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், கொண்டையம்பாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து இந்த அணை கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அந்த இடம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வனத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்தே செயல்பட வேண்டிய நிலை இருக்கிறது.

சம்பந்தப்பட்ட அந்த 3 துறைகளையும் ஒருங்கிணைக்க முடியாததால் கடந்த 3 ஆண்டுகளாக திட்டம் கிடப்பில் போடப்பட்டு வந்தது. இதனால் அணை கட்டக்கோரி விவசாயிகள் தொடர்ந்து போராடி வந்தனர். இதைத்தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அணை அமைய உள்ள இடத்துக்கு சென்று கடந்த மாதம் ஆய்வு செய்தனர்.

பின்னர் இதுபற்றி அவர்கள் மத்திய அரசுக்கு, வனப்பகுதியில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட வேண்டிய நிலை இருப்பதாக அறிக்கை அனுப்பினர். இந்த நிலையில் அணை அமைய உள்ள இடத்தில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று நேற்று மத்திய எம்.பவர் குழு, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘வேதபாறை அணை கட்டப்பட்டால் 35-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறும். இதனால் உடனடியாக வேதபாறையில் உடனடியாக அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story