விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்து விட்டு திரும்பிய போது லாரி கவிழ்ந்து 40 பக்தர்கள் படுகாயம்
எடப்பாடி அருகே விநாயகர் சிலையை ஆற்றில் கரைத்து விட்டு திரும்பிய போது, லாரி கவிழ்ந்து சேலத்தை சேர்ந்த 40 பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
எடப்பாடி,
சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தன. இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரமாண்ட விநாயகர் சிலை ஒன்றை காவிரி ஆற்றில் கரைக்க அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த 60 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் நேற்று ஒரு லாரியில் கோனேரிப்பட்டி காவிரி ஆற்றுக்கு கொண்டு வந்தனர். லாரியை அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் தீபன் (வயது 24) ஓட்டி வந்தார்.
அங்கு சிலையை கரைத்த அவர்கள், அங்கிருந்து சேலம் அன்னதானப்பட்டி பகுதிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காட்டுப்புத்தூர் நால்ரோடு அருகே ஒரு வளைவில் அந்த லாரி வந்த போது, நிலைதடுமாறி திடீரென கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த மேகலா (வயது 41), சுமதி (47), பாத்திமா, கவுசல்யா(23), தீபக் (13), சங்கீதா (34), கிருத்திகா ஸ்ரீ (10), மகாலட்சுமி (50), ஜோதிகா (19), இலக்கியா (18), கோகுல் (18), ஆனந்த் (35), சக்திவேல் (28), லாரி டிரைவர் தீபன் (24), பொன்னர் (19), அசோகன் (52), பார்த்திபன் (25), ரமேஷ், உமாநாத் (22), ராஜ்குமார் உள்பட 40 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 30-க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story