துபாய் நாட்டில் சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிப்பு: போலீஸ் அதிகாரி நடவடிக்கையால் ஊர் திரும்பிய நாங்குநேரி வாலிபர்
துபாய் நாட்டில் நாங்குநேரி வாலிபருக்கு சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரி நடவடிக்கையால் அந்த வாலிபர் சொந்த ஊர் திரும்பினார்.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி திருவேங்கடநாதபுரம் தெருவைச் சேர்ந்தவர் ராமையா மகன் சண்முகசுந்தரம் (வயது 29). இவருடைய மனைவி நதியா. இவர்களுக்கு ராம் (4) என்ற மகனும், சஞ்சனா (2) என்ற மகளும் உள்ளனர்.
சண்முகசுந்தரம், காரைக்குடி ஸ்ரீராம்நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் மூலம் வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்தார். வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்காக ரூ.2 லட்சம் செலவு ஆகும் என்று ஜெயக்குமார், சண்முகசுந்தரத்திடம் கூறினார். மேலும் மாத சம்பளம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கும் என்றும் தெரிவித்தார். இதை நம்பிய சண்முகசுந்தரம் ரூ.1½ லட்சம் தருவதாக கூறினார்.
அதன்படி கடந்த ஆண்டு மார்ச் மாதம் துபாய் நாட்டில் அஜ்மல் நகர் பகுதியில் உள்ள நிறுவனத்தில் எலட்ரீசியனாக சண்முகசுந்தரம் வேலைக்கு சேர்ந்தார். ஆனால் அந்த நிறுவனம் முதல் மாதம் மட்டுமே சண்முகசுந்தரத்திற்கு சம்பளம் கொடுத்துள்ளது. அதுவும் ரூ.20 ஆயிரம் தான் வழங்கப்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்திடம் கேட்டால் சரியாக பதில் அளிக்கவில்லை. தொடர்ந்து அவருக்கு பல மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடித்து, சாப்பாடு மட்டும் கொடுத்து வந்தனர். இதையடுத்து சண்முகசுந்தரம் அந்த நிறுவனத்தினரிடம் தான் சொந்த ஊருக்கு செல்வதாக கூறினார். அப்போது, நிறுவனத்தினர் உனது விசாவிற்கு ரூ.1½ லட்சம் செலவு செய்து உள்ளோம். அதை கொடுக்க வேண்டும். மேலும் ஜெயக்குமார் சொன்னால் தான் நீ இந்தியாவுக்கு செல்ல முடியும் என்றும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகசுந்தரம் அங்குள்ள தொழிலாளர் துறை அலுவலகத்திலும், இந்திய தூதரகத்திலும் முறையிட்டார். ஆனால் அவர்கள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அதே பகுதியில் வேலை பார்த்து வரும் விஜயநாராயணம் பகுதியைச் சேர்ந்த கலையரசன் என்பவர் சண்முகசுந்தரத்திற்கு உதவி செய்ய முன்வந்தார். அவரும் சண்முகசுந்தரம் வேலை பார்க்கும் நிறுவனத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து இங்கு நடந்து வரும் சம்பவம் குறித்து சண்முகசுந்தரம் செல்போன் மூலம் தனது மனைவி நதியாவுக்கு தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷில்பா, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபுநபு ஆகியோரிடமும் மனுகொடுத்தார். டி.ஐ.ஜி. இந்த மனுவை வள்ளியூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்துக்கு அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டார். பின்னர் அவர் ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தி சண்முகசுந்தரத்தை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். பின்னர் துபாயில் இருந்து அவர் கடந்த 31-ந் தேதி நாங்குநேரி வந்தார்.
இந்த நிலையில் சண்முகசுந்தரம் நேற்று தனது குடும்பத்துடன் வள்ளியூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்தை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து சண்முகசுந்தரம் கூறுகையில், “காரைக்குடியைச் சேர்ந்த ஏஜெண்டு ஜெயக்குமார் மூலம் துபாய் நாட்டில் அஜ்மல் நகரில் வேலைக்கு சென்றேன். அங்கு எனக்கு சரியான சம்பளம், சாப்பாடு கொடுக்கவில்லை. பல மாதங்களாக சம்பள பாக்கி வைத்து உள்ளனர். இந்திய தூதரகம், அங்குள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நான் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அதற்கு பணம் கேட்டனர். மேலும் நான் எனது மனைவியை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்கள் குறித்து தெரிவித்தேன். தற்போது, வள்ளியூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முயற்சியால் நான் ஊருக்கு வந்து இருக்கிறேன். இதற்கு உதவிய அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்“ என்றார்.
Related Tags :
Next Story