நாங்குநேரியில் அங்கன்வாடி குழந்தைகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்


நாங்குநேரியில் அங்கன்வாடி குழந்தைகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 5 Sept 2019 4:00 AM IST (Updated: 5 Sept 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி அங்கன்வாடி குழந்தைகளுடன் கலெக்டர் ஷில்பா கலந்துரையாடினார்.

நெல்லை, 

நாங்குநேரி பெரிய கோவில் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு நேற்று கலெக்டர் ஷில்பா சென்றார். அவர் அங்கு குழந்தைகளை பார்த்து அவர்களுடன் பேசி கலந்துரையாடல் செய்தார். பின்னர் அங்கன்வாடி மைய வளாகத்தில் கொய்யா, மாதுளை மரக்கன்றுகளை நட்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீர்நிலைகளை பாதுகாத்திட தமிழக அரசு குடிமராமத்து பணிகளை போர்கால அடிப்படையில் மாநிலம் முழுவதும் செய்து கொண்டிருக்கிறது. இதனால் மழைநீரை எளிதாக சேகரிக்க முடியும் மழையினை எளிதாக பெறவும், பூமி வெப்ப மயமாதலை தடுக்கவும் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் இதற்காக தமிழக அரசு சார்பில் ஆண்டிற்கு 60 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் ஏற்கனவே நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து அனைத்து பள்ளி, அங்கன்வாடி மையங்களில் தற்பொழுது மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் தங்களது பள்ளி வயது குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பழக்கத்தினை உருவாக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின் போது காய்கறி சத்தான உணவுப்பொருட்கள் அடங்கிய சிறு கண்காட்சி அரங்கினை கலெக்டர் ஷில்பா பார்வையிட்டு குழந்தைகளுக்கு சத்தான உணவினை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக நாங்குநேரி ஜீயர்குளம், சூரன்குடிவுகுளம், கடம்போடுவாழ்வுகுளம், தாமரைகுளம் ஆகிய குளங்கள் குடிமராமத்து பணிகள்மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார். இவர், அந்த குடிமராமத்து பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்திட தமிழக அரசு குடிமராமத்து பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

118 சிறுபாசன குளங்களிலும், 215 ஊருணிகளிலும் குடிமராமத்து பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பொதுப்பணித்துறை சார்பில் 185 குளங்களில் குடிமராமத்து பணிகள் நடந்து வருகின்றன.

இது தவிர மாவட்டம் முழுவதும் 200 நீர் நிலைகள் கண்டறியப்பட்டு அரசு நிதி இல்லாமல் குடிமராமத்து பணிகள் தன்னார்வலர்கள், புரவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் மழைநீர் சேகரிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது உபகோட்ட பொறியாளர் மதன்சுந்தர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story