சங்கரன்கோவில் அருகே, போலீஸ் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்
சங்கரன்கோவில் அருகே போலீஸ் வேன் கவிழ்ந்து 10 பேர் காயமடைந்தனர்.
சங்கரன்கோவில்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 11-வது அணியின் அலுவலகத்தை சேர்ந்த ஊழியர் ஒருவரின் இல்ல திருமண விழா நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்ள சிறப்பு காவல்படை அலுவலக ஊழியர்கள் சுமார் 25 பேர் போலீஸ் வேனில் ராஜபாளையத்தில் இருந்து சங்கரன்கோவிலுக்கு வந்தனர். பின்னர் அனைவரும் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அந்த வேனில் வந்த 15 பேர் புளியங்குடிக்கு புறப்பட்டு சென்றனர். எனவே மீதம் உள்ள 10 பேர் மட்டும் மாலை அதே வேனில் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு சென்றனர். வேனை சிறப்பு காவல்படை மோட்டார் வாகன பிரிவு காவலர் சாமி ஓட்டினார். வேன் சங்கரன்கோவிலை அடுத்த மணலூர் விலக்கு அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை இளநிலை உதவியாளர் ராமராஜ் பலத்த காயமடைந்தார். மேலும் அலுவலக கண்காணிப்பாளர்கள் பாஸ்கர், சிவசுப்பிரமணியன், உதவியாளர்கள் கண்ணன், பாலகிருஷ்ணன், பெருமாள், முத்துராமலிங்கம், ராமர்பிச்சை, ரத்தினமூர்த்தி உள்பட 9 பேர் லேசான காயமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 10 பேரையும் மீட்டு சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ராமராஜ் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற 9 பேரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story