நெல் கொள்முதல் நிலையங்கள் ஒரு சிலநாட்களில் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்


நெல் கொள்முதல் நிலையங்கள் ஒரு சிலநாட்களில் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும்
x
தினத்தந்தி 4 Sep 2019 10:15 PM GMT (Updated: 4 Sep 2019 8:25 PM GMT)

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஒரு சில நாட்களில் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர், 

திருவாரூர் வட்டம், வஞ்சியூர் கிராமத்தில் சித்தாற்றின் குறுக்கே பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.2 கோடியே 38 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் வேப்பதாங்குடி-வஞ்சியூர் இணைப்பு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தை அமைச்சர் காமராஜ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ஆனந்த் உடன் இருந்தார்.

பின்னர் அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழியில் சாதாரண மக்கள் பயன்பெறுகின்ற அனைத்து நலத்திட்டங்களையும் தொடர்ந்து அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் தேவைகேற்ப பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. தற்போது சித்தாற்றின் குறுக்கே வேப்பதாங்குடி-வஞ்சியூர் இணைப்பு பாலம் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்யப்பட்டது. இந்த பாலத்தோடு சேர்ந்து மாவட்டத்தில் 50 பாலங்கள் கட்டப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது.

தமிழகத்திற்கு தற்போது 23 ஆயிரத்து 35 கிலோ லிட்டர் மண்எண்ணெய் தேவையாக உள்ளது. தற்போது 10 ஆயிரத்து 764 கிலோ லிட்டர் மண்எண்ணெய் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய நிதித்துறை, உணவுத்துறை, பெட்ரோலியத்துறை மந்திரிகளை நேரில் சந்தித்து தமிழகத்திற்கு தேவையான மண்எண்ணெய்யை வழங்க வேண்டி முதல்-அமைச்சரின் கடிதம் வழங்கப்பட்டது. மத்திய மந்திரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்த வரையில் அனைவருக்குமான பொது வினியோகத்திட்டம் தொடர்ந்து செயல்படும். தமிழகத்தில் 1 கோடியே 99 லட்சத்து 97 ஆயிரம் குடும்ப அட்டைகள் புதிய மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே சாதாரண மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா அரிசி போன்ற மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

நெல் கொள்முதலை பொறுத்த வரை கடந்த ஆண்டு 19 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குறுவை அறுவடை நடைபெற்று வரும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது ஆகஸ்டு மாதம் காரீப் சீசன் முடிவடைந்ததால் கணக்குகள் நெறிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவை சரி செய்யப்பட்டு ஒரு சில நாட்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரலிங்கம், தேவராஜ், தாசில்தார் நக்கீரன், உதவி பொறியாளர் சத்தியமூர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story