பெயர் பலகை கூட மாற்றம் செய்யப்படவில்லை: 2 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் தஞ்சை எம்.எல்.ஏ. அலுவலகம்


பெயர் பலகை கூட மாற்றம் செய்யப்படவில்லை: 2 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் தஞ்சை எம்.எல்.ஏ. அலுவலகம்
x
தினத்தந்தி 5 Sept 2019 4:15 AM IST (Updated: 5 Sept 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகம் கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கின்றன. இதனால் குறைகளை கூட தெரிவிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, பாபநாசம், திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தஞ்சை சட்டமன்ற தொகுதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத்தேர்தலோடு தேர்தல் நடைபெறவில்லை.

தேர்தலின் போது அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதையடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டு பின்னர் நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த ரெங்கசாமி 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ரெங்கசாமி டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து அவர் 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து கோர்ட்டில் வழக்கு நடந்து வந்ததால் தஞ்சை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகமும் பூட்டப்பட்டது. இந்த அலுவலகம் தஞ்சை காந்திஜி சாலையில் தற்போது கட்டப்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகத்துக்கு எதிர்புறத்தில் உள்ளது. மேலும் தஞ்சை தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் தஞ்சை தொகுதியும் ஒன்று. ஏப்ரல் மாதம் தேர்தல் முடிந்து மே மாதம் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க.வை சேர்ந்த நீலமேகம் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

புதிதாக எம்.எல்.ஏ. தேர்வு செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆகி விட்டது. இன்னும் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகை மாற்றம் செய்யப்படவில்லை. கடந்த முறை எம்.எல்.ஏ.வாக இருந்த ரெங்கசாமியின் பெயர் இடம் பெற்றுள்ள பெயர் பலகை தான் இன்னும் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே எம்.எல்.ஏ. அலுவலகம் பூட்டிக்கிடக்கிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “கடந்த 2016-ம் ஆண்டு தஞ்சை தொகுதிக்கு தேர்தல் நடைபெறாமல் 6 மாதம் கழித்து நவம்பர் மாதம் தான் தேர்தல் நடந்தது. அதன் பின்னர் சில மாதங்களிலேயே எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டு விட்டார். எம்.எல்.ஏ. அலுவலகமும் பூட்டப்பட்டு விட்டது. இந்த நிலையில் புதிதாக எம்.எல்.ஏ. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் எம்.எல்.ஏ. அலுவலகம் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் நாங்கள் குறைகளை எம்.எல்.ஏ. அலுவலகத்தில் தெரிவிக்க முடியவில்லை. மனுக்களை கூட கொடுப்பதற்கு வழியில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

Next Story