ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு


ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 Sep 2019 10:45 PM GMT (Updated: 4 Sep 2019 8:26 PM GMT)

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் காங்கிரஸ் கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஓசூர், 

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நீர்வளத்துறை மந்திரியுமான டி.கே.சிவகுமார் நேற்று முன்தினம் இரவு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, கனகபுரா, ராம்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் நேற்று ஆனேக்கல், அத்திப்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் 50-க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் டயர்களை நடுரோட்டில் தீயிட்டு கொளுத்தினார்கள். மேலும் சாலையின் நடுவில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால், ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பொதுமக்களும், பயணிகளும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story