பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவுக்கு அனுப்பப்படுகிறது
விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கில் இருந்த பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று (வியாழக்கிழமை) பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
விருத்தாசலம்,
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, கடலூர் மாவட்டத்தில் உள்ள 2,300 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் அனைத்தும் விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் வாக்குப்பதிவின் போது பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், விவிபேட் கருவிகளும் இருந்தன.
இந்த நிலையில், பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளை மட்டும் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன் பேரில் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த் மேற்பார்வையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் விருத்தாசலம் அரசு சேமிப்பு கிடங்கை அதிகாரிகள் நேற்று திறந்தனர். இதன்பிறகு அங்கிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுதடைந்த 5 கட்டுப்பாட்டு கருவிகள், 8 மின்னணு வாக்குபதிவு கருவிகள் மற்றும் 68 வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் எந்திரங்களை மட்டும் பெங்களூருவில் உள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு இன்று(வியாழக்கிழமை) லாரிகளில் அனுப்பி வைப்பதற்காக தனியாக எடுத்து தேர்தல் பிரிவு துணை தாசில்தார் ராஜகணபதியிடம் ஒப்படைத்தனர்.
அப்போது தாசில்தார் கவியரசு மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஞானமுத்து(தி.மு.க.), மணிகண்டன்(பா.ம.க.), ரமேஷ்(தே.மு.தி.க.), அசோகன்(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி), கலியபெருமாள்(இந்திய கம்யூனிஸ்டு கட்சி) ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story