வியாசர்பாடியில் கோஷ்டி மோதல்: ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது


வியாசர்பாடியில் கோஷ்டி மோதல்: ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 Sept 2019 4:45 AM IST (Updated: 5 Sept 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

வியாசர்பாடியில் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கோகுல் என்ற கோகுல்நாத் (வயது 23). இவர் மீது ஏற்கனவே கொலை, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த ரவுடி ராசைய்யாவும், கோகுல்நாத்தும் இரு கோஷ்டிகளாக செயல்பட்டு அப்பகுதியில் மாமூல் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் முன்விரோதத்தில் இருந்த கோகுல்நாத், ராசைய்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, வியாசர்பாடி சுந்தரம்லைன் பகுதியில் நடந்து வந்த அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ராசைய்யா தப்பி ஓடிவிட்டார். பின்னர் ராசய்யா அவரது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து தேசிங்கபுரம் பகுதியில் நடந்து வந்த கோகுல்நாத்தை வழிமறித்து சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபிநாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கோகுல்நாத் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உதவி கமிஷனர் அழகேசன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலைக்கு காரணமானவர்கள் திருவொற்றியூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று தலைமறைவாக இருந்த வியாசர்பாடியை சேர்ந்த பிரேம்நாத் (வயது 19), அப்புன் என்ற சந்திரசேகர் (22), பிரபு (20) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 3 வாலிபர்களை புழல் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் இதில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான ராசைய்யா உள்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story