டி.கே.சிவக்குமார் கைதை கண்டித்து போராட்டம்: ராமநகர் மாவட்டத்தில் முழு அடைப்பு; 4 பஸ்களுக்கு தீ வைப்பு-கல்வீச்சு


டி.கே.சிவக்குமார் கைதை கண்டித்து போராட்டம்: ராமநகர் மாவட்டத்தில் முழு அடைப்பு; 4 பஸ்களுக்கு தீ வைப்பு-கல்வீச்சு
x
தினத்தந்தி 5 Sept 2019 5:46 AM IST (Updated: 5 Sept 2019 5:46 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமநகர் மாவட்டத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 4 பஸ்கள், 2 இருசக்கர வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

கல்வீச்சு சம்பவத்தில் 15 பஸ்கள் சேதம் அடைந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக காங் கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவர் டி.கே.சிவக்குமார். முன்னாள் மந்திரியான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. மாநிலங்களவை தேர்தலில் குதிரை பேரத்தில் சிக்காமல் இருக்க குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவில் தங்கவைத்து அவர்களை பாதுகாக்கும் பணியை டி.கே.சிவக்குமார் மேற்கொண்டார். காங்கிரஸ் மேலிடம் வழங்கிய அந்த பணியை அவர் சரியாக செய்து முடித்தார்.

இதனால் குஜராத்தில் இருந்து மாநிலங்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். குஜராத் எம்.எல்.ஏ.க்கள் பெங்களூருவில் இருந்தபோதே, டி.கே.சிவக்குமாரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது. இதுகுறித்த விசாரணையை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை வசம் ஒப்படைத்தது.

அதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர், டி.கே.சிவக்குமார் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த பிப்ரவரி மாதம் டி.கே.சிவக்குமாருக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பினர். அமலாக்கத்துறையின் இந்த சம்மனை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்து கடந்த வாரம் உத்தரவிட்டது.

இதையடுத்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை அடுத்து டி.கே.சிவக்குமார் கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். தொடர்ந்து 4 நாட்கள் ஆஜரான அவரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசாரணையின் இறுதியில் டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த நிலையில் அவர் திடீரென்று நெஞ்சுவலி, ரத்த அழுத்தம் அதிகரிப்பு மற்றும் சர்க்கரை அளவு குறைந்தது போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று அவரது உடல்நிலை சீரானது.

இதற்கிடையே டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் நேற்று காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ராமநகர் மாவட்டத்தில் முழு அடைப்பு நடைபெற்றது. இதனால் அந்த மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் சேவை நிறுத்தப்பட்டது. அரசு மற்றும் தனியார் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மண்டியா, பெங்களூரு, துமகூரு, தட்சிண கன்னடா, ராமநகர் ஆகிய மாவட்டங்களில் 15-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அந்த பஸ்களின் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. கனகபுராவில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 அரசு பஸ்சை நிறுத்திய அடையாளம் தெரியாத நபர்கள், பெட்ரோல் ஊற்றி பஸ்களுக்கு தீவைத்தனர்.

இதில் அந்த பஸ்கள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. தீயில் முழுவதும் எரிந்து நாசமான அந்த பஸ்கள் எலும்புக்கூடாக காட்சியளித்தது. மேலும் பெங்களூருவிலும் 2 பஸ்களுக்கு தீவைக்கப்பட்டது. இதில் ஒன்று தனியார் பஸ். அந்த பஸ்கள் பாதி அளவுக்கு தீயில் எரிந்து சேதமானது. யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதிகளில் பதற்றமும்-பரபரப்பும் நிலவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். மேலும் கனகபுரா தாலுகாவில் உள்ள சாத்தனூர் பகுதியில் போராட்டக்காரர்கள் 2 மோட்டார் சைக்கிள்களை தீயிட்டு எரித்தனர். இந்த சம்பவங்களால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

பெங்களூரு-மைசூரு ரோட்டை மறித்து காங்கிரசார் ராமநகரில் போராட்டம் நடத்தினர். அப்போது சாலையில் டயர்களை போட்டு தீயிட்டு எரித்து தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையை போலீசார் மூடினர். வேறு வழியில் வாகனங்களை போலீசார் திருப்பிவிட்டனர்.

மேலும் போராட்டக்காரர்கள், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உருவ படத்தையும் தீயிட்டு கொளுத்தினர். காங்கிரஸ் நடத்திய போராட்டத்திற்கு ஜனதா தளம்(எஸ்) கட்சியும் ஆதரவு வழங்கியது. காங்கிரஸ் கட்சியினர் சாலையில் டயர்களை தீயிட்டு எரித்து கோஷங்களை எழுப்பினர். மத்திய அரசு, அமித்ஷா, முதல்-மந்திரி எடியூரப்பாவை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று பரபரப்பான சூழல் நிலவியது. ராமநகர் மாவட்டத்தில் இன்றும்(வியாழக்கிழமை) 2-வது நாளாக முழு அடைப்பு நடைபெறும் என்று அந்த மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் சார்பில் நேற்று பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெங்களூருவில் அக்கட்சியின் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் தலைமையிலும், மைசூருவில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தையொட்டி மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

Next Story