செயலி-இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யலாம் - கலெக்டர் தகவல்
வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் செல்போன் செயலி மற்றும் இணையதளத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யலாம் என்று கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் விவரங்கள் சரிபார்ப்பு தொடர்பாக அரசியல் கட்சியினர் பங்கேற்ற, ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, உதவி கலெக்டர் (பயிற்சி) மதுபாலன், மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், தேர்தல் பிரிவு தாசில்தார் சுப்பிரமணியபிரசாத் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் பேசியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யப்பட இருக்கிறது. இதற்காக வருகிற 30-ந்தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடக்கிறது. இதை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று விவரங்கள் சரியாக இருக்கிறதா? என்று வாக்காளர்கள் சரிபார்க்கலாம். இதற்கு vot-ers he-l-p-l-i-ne எனும் செயலி அல்லது கூகுள் இணையதளத்தில் nvsp po-rt-al எனும் தளத்துக்கு சென்று சரிபார்ப்பதோடு, திருத்தமும் செய்யலாம்.
இதுதவிர ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் வாக்காளர் உதவி மையம் செயல்படுகிறது. அந்த உதவி மையத்திலும் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கலாம். அதேபோல் பொதுசேவை மையங்களிலும் சரிபார்த்து கொள்ளலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் 1950 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு வாக்காளர் பட்டியல் விவரங்கள் சரிபார்ப்பு, திருத்தம் செய்யலாம்.
இந்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு குறித்து மருத்துவமனைகள், கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், வாரச்சந்தை, பஸ்நிலையங்கள் உள்பட பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புக்கு அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு அவசியம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
Related Tags :
Next Story