இன்று விநாயகர் சிலை ஊர்வலம், செஞ்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு


இன்று விநாயகர் சிலை ஊர்வலம், செஞ்சியில் போலீசார் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 5 Sep 2019 10:15 PM GMT (Updated: 5 Sep 2019 5:02 PM GMT)

செஞ்சியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதையொட்டி போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

செஞ்சி,

நாடு முழுவதும் கடந்த 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி செஞ்சி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பொதுமக்கள் வழிபட்டனர். இதில் 65 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து 5-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மரக்காணத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளது. இந்த ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏராளமான போலீசார் செஞ்சியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நேற்று செஞ்சியில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பானது விழுப்புரம் சாலை, காந்தி பஜார், செட்டிப்பாளையம், தேசூர்பாட்டை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நீதிராஜன், ராமநாதன், இன்ஸ்பெக்டர்கள் சீனுவாசன், சுபா, மதுசூதனன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி செஞ்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை திறக்கப்படாது. குடித்து விட்டு ஊர்வலத்துக்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story