குடிமராமத்துக்கு தேர்வு செய்யப்படாத கண்மாய் தூர்வாரும் பணியில் ஈடுபட மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு
குடிமராமத்து பணிக்கு தேர்வு செய்யப்படாத கண்மாய்களை தூர்வாரும் பணியில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஈடுபடலாம் என்று கலெக்டர் சிவஞானம் கூறினார்.
விருதுநகர்,
காரியாபட்டி மேலக்கள்ளங்குளம் கண்மாய் மற்றும் திருச்சுழி கடுக்காய்குளம் கண்மாய்களில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை கலெக்டர் சிவஞானம் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறையின் மூலம் ரூ.26.70 கோடி மதிப்பீட்டில் 65 கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டு விவசாயிகளின் பங்களிப்போடு புனரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி மேலக்கள்ளங்குளம் கண்மாய் ரூ.42.50 லட்சம் மதிப்பீட்டிலும், கடுக்காய்குளம் கண்மாய் ரூ.50.75 லட்சம் மதிப்பீட்டிலும் விவசாயிகளின் பங்களிப்போடு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலக்கள்ளங்குளம் கண்மாய் புனரமைக்கப்படுவதால் 65.12 எக்டேர் விளைநிலங்களும், கடுக்காய்குளம் கண்மாய் புனரமைக்கப்படுவதால் 42.40 எக்டேர் நிலங்களும் பயன்பெறும். பணிகளை காலம் தாழ்த்தாமல் விரைந்து பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முழுமையாக நிறைவு செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 65 கண்மாய்கள் தவிர இதர கண்மாய்களை தூர்வாரும் பணியில் விருப்பமுள்ள இளைஞர்கள், மாணவ, மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற்று ஈடுபடலாம். இவ்வாறு கூறினார்.
இந்த ஆய்வின் போது அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் செல்லப்பா, பொதுப்பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் கிராமத்திலுள்ள பாண்டியன் கண்மாய், வெம்பக்கோட்டை கண்மாய், எதிர்க்கோட்டை கிராமத்திலுள்ள கோபாலசமுத்திரம் கண்மாய், நதிக்குடி கிராமத்திலுள்ள சீவல்குளம் கண்மாய் மற்றும் சிறுகுளம் கண்மாய் ஆகிய கண்மாய்களில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story