கிணத்துக்கடவு அருகே, அரசு பஸ் நடுரோட்டில் கவிழ்ந்தது - 14பேர் படுகாயம்
கிணத்துக்கடவு அருகே அரசு பஸ் முன்னால் சென்ற லாரியை முந்திச்செல்ல முயன்ற போது நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணத்துக்கடவு,
பொள்ளாச்சி பஸ்நிலையத்தில் இருந்து நேற்றுகாலை 9.58 மணிக்கு ஒரு அரசுபஸ் 46 பயணிகளுடன் கோவைக்கு கிளம்பியது. இந்த பஸ்சை பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்த டிரைவர் முருகவேல் (வயது34) என்பவர் ஓட்டினார். பஸ்சில் கண்டக்டராக வடக்கிபாளையத்தை சேர்ந்த உமாசங்கர் (40) என்பவர் இருந்தார். பஸ் தாமரைக்குளத்தை அடுத்த சென்றாம்பாளையம் பிரிவு அருகில் சென்ற போது முன்னால் சென்ற ஒரு லாரியை முந்தமுயன்றது. அப்போது திடீரென பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. ரோட்டின் நடுவில் உள்ள இரும்பு தடுப்பு மீது மோதி நடு ரோட்டில் கவிழ்ந்தது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அய்யோ, அம்மா என்று கூக்குரலிட்டனர். அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து மீ்ட்பு பணியில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயம் அடைந்த பொள்ளாச்சி சமத்தூரை சேர்ந்த குப்புச்சாமி (30) ராமாத்தாள் (63), ஜமீன் காளியாபுரம் சேர்ந்த வெங்கட்ராமன் (60), தனலட்சுமி (50), பொள்ளாச்சி வர்கீஸ்பேகம் (39), ராஜேஸ்வரி (38) உள்பட 14 பேரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசுமருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேன் மூலம் கவிழ்ந்து கிடந்த பஸ்சை அகற்றி, போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். 4 வழிச்சாலை என்பதால், ஒரு பகுதியில் போக்குவரத்தை திருப்பி விட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்படையவில்லை.
Related Tags :
Next Story