அரசு பள்ளி மாணவிகள் சாலையில் கண்டெடுத்த பணம் உரியவரிடம் ஒப்படைப்பு
அரசு பள்ளி மாணவிகள் சாலையில் கண்டெடுத்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர்.
அரூர்,
அரூர் அடுத்த ஜம்மணஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி தாரணி மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் காஞ்சனா, சுவேதா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் ரூபாய் நோட்டுகள் விழுந்து கிடந்ததை பார்த்தனர். அந்த பணத்தை எடுத்து பார்த்த போது, அதில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மூன்றும், 500 ரூபாய் நோட்டு ஒன்றும் என மொத்தம் ரூ.6,500 இருந்துள்ளது. அதனை கொண்டு வந்து பள்ளியின் விலங்கியல் ஆசிரியர் சுரேஷ் என்பவரிடம் மாணவிகள் ஒப்படைத்தனர்.
பின்னர் இதுபோல் பணம் கிடைத்துள்ளதாகவும், தவற விட்டவர்கள் பெற்று கொள்ளுமாறும் ஊர் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உரிய நோட்டு விவரங்களை கூறி தவறவிட்ட பெண்மணி அந்த பணத்தை பெற்று கொண்டார். கீழே கிடந்து கண்டெடுத்த பணத்தை நேர்மையுடன் கொண்டு வந்து ஒப்படைத்த பள்ளி மாணவிகளை தலைமை ஆசிரியர் அருள்முருகன் பரிசு வழங்கி பாராட்டியதுடன் ஆசிரியர்களும், ஊர் பொதுமக்களும் பாராட்டினர்.
Related Tags :
Next Story