100 நாள் வேலை திட்ட சம்பளத்தை உயர்த்தக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்ட சம்பளத்தை உயர்த்தி வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
தொழிலாளர்கள் போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றக்கூடாது. எம்.எஸ். சாமிநாதன் பரிந்துரைபடி விளை பொருட்களின் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும்.
விவசாய தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், சம்பளத்தை ரூ.400 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகியவற்றின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனி.மணி, மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட துணை செயலாளர் மாரியப்பன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாய சங்க செயலாளர் ராயர், தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் துரைக்கண்ணு மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story