காரைக்குடி-திருவாரூர் வழியாக சென்னைக்கு ரெயில் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்


காரைக்குடி-திருவாரூர் வழியாக சென்னைக்கு ரெயில் இயக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2019 3:30 AM IST (Updated: 6 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி-திருவாரூர் வழியாக சென்னைக்கு ரெயில் இயக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பட்டுக்கோட்டை,

ஆங்கிலேயர் காலத்தில் காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு ரெயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் 2012-ம் ஆண்டு வரை மீட்டர் கேஜ் பாதையில் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வந்தது. பின்னர் அகல ரெயில் பாதை அமைப்பதற்காக ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அகல ரெயில் பாதை பணிகள் முடிவடைந்த பின்னர் கடந்த ஆண்டு (2018) முதல் காரைக்குடியில் இருந்து திருவாரூரை வரை டெமு ரெயில் போக்குவரத்து நடந்து வருகிறது. அதுவும் வருகிற 8-ந் தேதி முதல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் கேட் கீப்பர்களை நியமிக்க வேண்டும். சென்னைக்கு ரெயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பட்டுக்கோட்டை ரெயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு பட்டுக்கோட்டை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிவகுரு, எம்.செல்வம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, மாவட்ட விவசாய சங்க துணை தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட சி.ஐ.டி.யூ. துணை தலைவர் எஸ்.சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் பட்டுக்கோட்டையில் ரெயில்வே ஊழியர்களுக்கு குடியிருப்பு வசதிகளை செய்து தரவேண்டும். ரெயில்வேயை தனியார்மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story