முதுகு தண்டுவட பாதிப்பு தினம்: பெரம்பலூரில் விழிப்புணர்வு ஊர்வலம் - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


முதுகு தண்டுவட பாதிப்பு தினம்: பெரம்பலூரில் விழிப்புணர்வு ஊர்வலம் - போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 6 Sept 2019 3:15 AM IST (Updated: 6 Sept 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தையொட்டி பெரம்பலூரில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தொடங்கி வைத்தார்.

பெரம்பலூர்,

முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தையொட்டி, ‘தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு’ சார்பில் பெரம்பலூர் ரோவர் வளைவில் நேற்று விபத்தில்லா உலகம் என்கிற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கலந்து கொண்டு இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் விபத்தினால் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் தங்களுக்கு நேர்ந்த சம்பவங்களை வாகன ஓட்டிகளிடம் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அருண்குமார், செல்வகுமார், முகமது அப்பாஸ் மற்றும் டாக்டர் அறிவழகன், வள்ளலார் குழுமங்களின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என்பதால் தண்டுவடம் காயமடைந்தோர் முன்னதாகவே வந்தனர். ஆனால் நிகழ்ச்சி தாமதமாக மாலை 5 மணியளவில் நடந்ததால் அவர்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

பெரம்பலூர் ரோவர் வளைவு சிக்னல் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும். ஆனால், அந்த சிக்னலில் போக்கு வரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுவதில்லை. நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் வருகை தந்ததால், மாலை 3.30 மணியளவில் இருந்து ரோவர் வளைவு சிக்னலில் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நெரிசலின்றி காணப்பட்டது. ஆனால் விழிப்புணர்வு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு போலீஸ் சூப்பிரண்டு சென்றவுடன், போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய போலீசாரும் சென்று விட்டனர். போலீஸ் சூப்பிரண்டு வருகைக்காக மட்டும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்திய போலீசார் தினமும் ரோவர் வளைவு சிக்னல் பகுதியில் பணியில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

Next Story