வ.உ.சி. பிறந்த நாளையொட்டி துறைமுகத்தை கண்டுகளித்த பொதுமக்கள்


வ.உ.சி. பிறந்த நாளையொட்டி துறைமுகத்தை கண்டுகளித்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 Sept 2019 3:00 AM IST (Updated: 6 Sept 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி துறைமுகத்தை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நேற்று கண்டுகளித்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்பு கழகத்தில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் உருவச்சிலைக்கு துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணைத்தலைவர் வையாபுரி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இணை பேராசிரியர் முத்துலட்சுமி கலந்து கொண்டு பேசினார்.

விழாவில் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக உறுப்பினர்கள் கோபிகிருஷ்ணா, சங்கரலிங்கம், கடலோர காவல்படை டி.ஐ.ஜி. அரவிந்த் சர்மா மற்றும் துறைமுக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி, துறைமுகத்தை பொதுமக்கள் இலவமாக பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் நேற்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தனர். அவர்களின் அடையாள அட்டைகள் சரிபார்க்கப்பட்டு, உரிய சோதனைக்கு பிறகு துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து பொதுமக்கள் கப்பல் தளங்களில் கப்பல்களில் சரக்குகளை ஏற்றி, இறக்குவதை ஆர்வமாக கண்டுகளித்தனர். சில கப்பல்களிலும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்கள் கப்பலுக்குள் சென்று பார்வையிட்டனர்.

இதுகுறித்து துறைமுகத்தை பார்வையிட்ட ஒருவர் கூறும்போது, “வ.உ.சி. பிறந்தநாளையொட்டி துறைமுகத்தை பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்திக் கொண்டு உள்ளோம். துறைமுகத்தில் உள்ள கப்பல் தளங்கள், அங்கு நிறுத்தப்பட்டு உள்ள கப்பல்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. கப்பல்களில் சரக்குகளை ஏற்றி, இறக்குவதை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.

கப்பலில் ஏறி பார்வையிடும் வாய்ப்பும் கிடைத்து இருக்கிறது. துறைமுகத்தை பார்வையிட அனுமதிக்கும் அறிவிப்பை சற்று முன்கூட்டியே அறிவித்தால் அதிகளவில் மக்கள் துறைமுகத்தை பார்வையிட வாய்ப்பாக அமையும்“ என்றார். 

Next Story