பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்: ரோஜா பூ, இனிப்பு கொடுத்து மாணவ-மாணவிகள் வாழ்த்து


பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்: ரோஜா பூ, இனிப்பு கொடுத்து மாணவ-மாணவிகள் வாழ்த்து
x
தினத்தந்தி 5 Sep 2019 9:30 PM GMT (Updated: 5 Sep 2019 8:41 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. ஆசிரியர்களுக்கு மாணவ-மாணவிகள் ரோஜா பூ மற்றும் இனிப்பு கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பெரம்பலூர்,

ஒரு தாய், இந்த உலகத்துக்கு தன் பிள்ளையை அடையாளம் காட்டுகிறாள். அந்த குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்டதும் அதற்கு கல்வி அறிவு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் ஆசிரியர் சமுதாயம் கற்றுத் தருகிறது. முன்னாள் ஜனாதிபதி மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன் படிப்பு முடிந்ததும் ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார். தனது வாழ்நாளில் தலைசிறந்த ஆசிரியராக திகழ்ந்தார். அவரது நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5-ந் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று ஆசிரியர் தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவ-மாணவிகள் ஆசிரியர்களுக்கு ரோஜா பூ கொடுத்து ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் வகுப்பறைகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மாணவ-மாணவிகள் பாடம் நடத்த வந்த ஆசிரியர்களை வரவேற்று, அவர்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆசிரியர்களை ‘கேக்’வெட்ட வைத்து, பின்னர் அவர்களுக்கு மாணவ- மாணவிகள் கேக்கினை ஊட்டி மகிழ்ந்தனர். கரும்பலகையில் ஆசிரியர்களை வாழ்த்தி கவிதை எழுதியிருந்தனர்.

இதேபோல, பெரம்பலூர் முத்துநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (வடக்கு) பயிலும் மாணவ- மாணவிகள் தங்களுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் பள்ளி வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் ராதாகிருஷணன் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர்தூவியும், இரு கரங்களையும் கூப்பி வணங்கி மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பள்ளிகளில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Next Story