பாசனகுளத்தை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்: பெண்கள் கதறி அழுதனர்


பாசனகுளத்தை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்: பெண்கள் கதறி அழுதனர்
x
தினத்தந்தி 6 Sept 2019 3:15 AM IST (Updated: 6 Sept 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே பாசன குளத்தை ஆக்கிரமித்து சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. இதைபார்த்து அப்பகுதி பெண்கள் கதறி அழுதனர்.

கறம்பக்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமம் உள்ளது. அங்குள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெட்டுக்குளத்தை காணவில்லை எனவும், அதை மீட்க துணிச்சல் மிக்க அதிகாரிகள் தேவை எனவும் குளந்திரான்பட்டு கிராமத்தை சேர்ந்த துரைகுணா என்பவர் துண்டு பிரசுரம் வெளியிட்டிருந்தார். இது கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக வலை தளங்களில் இந்த துண்டு பிரசுரம் குறித்து கருத்துக்கள் உலா வந்தன.

இதைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களுக்கு முன்பு அந்த குளத்தை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, தாசில்தார் வில்லியம் மோசஸ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் குளம் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில், நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை யடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளும்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்தி விட்டு அதிகாரிகள் சென்றனர்.

இதற்கிடையே துண்டு பிரசுரம் வெளியிட்டிருந்த சமூக ஆர்வலர் துரைகுணா மீது கிராம நிர்வாக அதிகாரி சாஸ்மின் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தன்பேரில் துரைகுணா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அந்த குளத்தில் இருந்த ஆக்கிரமிப்பு பயிர்களை முற்றிலுமாக அகற்றும்படி புதுக்கோட்டை கலெக்டர் உமா மகேஸ்வரி, வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் நேற்று புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தலைமையில், வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 5 பொக்லைன் எந்திரங்கள் மூலம் குளத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்களை அகற்றினர். அப்போது அப்பகுதி பெண்கள் விளைந்த பயிர்களை அழிக்காதீர்கள் என கூறி கதறி அழுதனர். அந்ந நிலத்தில் வேலை பார்த்த பெண்கள் எங்கள் உழைப்பு மண்ணா போச்சே என கூறி கதறினர். அவர்களை அதிகாரிகளும், போலீசாரும் சமாதானப்படுத்தினர்.

ஆக்கிரமிப்பு குளத்தை மீட்பதற்கு வரவேற்பு தெரிவித்த அப்பகுதி பொதுமக்கள், அதே வேலை அறுவடை தருவாயில் நெற்பயிர்களை அழித்ததை ஏற்கமுடியவில்லை என கூறினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடர்ந்து அப்பகுதியில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story