பொதுப்பணித்துறையை கண்டித்து வாய்க்காலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்


பொதுப்பணித்துறையை கண்டித்து வாய்க்காலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Sept 2019 3:30 AM IST (Updated: 6 Sept 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

பொதுப்பணித்துறையை கண்டித்து திருச்சியில் வாய்க்காலில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது அரசு நிதி ஒதுக்கியும் குடிமராமத்து பணி மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினர்.

திருச்சி, 

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் உள்ளிட்ட 18 கிளை வாய்க்கால்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்திற்காக காவிரி தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் பல இடங்களில் கால்வாய் தூர்வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் தண்ணீர் கடைமடை பகுதிக்கு செல்லவில்லை. திருச்சி அருகே புங்கனூரில் 2-ம் எண் வாய்க்கால் உள்ளது. கட்டளை மேட்டு பெரிய வாய்க்காலில் திறக்கப்பட்ட காவிரி தண்ணீர் இந்த வாய்க்காலுக்கும் வந்திருக்க வேண்டும். ஆனால், 2-ம் எண் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை என்பதால் காவிரி தண்ணீர் பாசனத்திற்கு இதுவரை வரவில்லை. இந்த வாய்க்காலில் வரும் தண்ணீர் மூலம் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், புங்கனூர், கள்ளிக்குடி, எடமலைப்பட்டி புதூர் உள்ளிட்ட இடங்களில் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். தண்ணீர் 2-ம் எண் வாய்க்காலில் வரவில்லை என்பதால் பாசன நிலங்கள் அனைத்தும் பயிர் சாகுபடி செய்யப்படாமல் காய்ந்து கிடக்கின்றன.

இந்த நிலையில், புங்கனூர் 2-ம் எண் வாய்க்காலில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதற்காக தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கி கொடுத்தும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசியல் தலையீட்டால் பணிகள் மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்த நிலையில் த.மா.கா. விவசாய பிரிவு மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில், புங்கனூர் காமராஜர் புது கட்டளை மேட்டு வாய்க்கால் பாசன வசதி பெறும் விவசாயிகள் மற்றும் பெண் விவசாய தொழிலாளர்கள் நேற்று காலை 10 மணிக்கு திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டு அருகே 2-ம் எண் வாய்க்காலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வாய்க்காலை தூர்வாராத பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், விரைவில் வாய்க்காலை தூர்வாரி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில், ‘இன்னும் ஒரு வாரத்திற்குள் 2-ம் எண் வாய்க்காலை தூர்வாரி காவிரி தண்ணீர் பாசனத்திற்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு முற்றுகையிடுவோம்’ என கூறினர்.

போராட்டம் நடத்தியபோது அதிகாரிகள் யாரும் வரவில்லை என்பதால், சிறிது நேரம் வாய்க்காலில் அமர்ந்து கோஷம் எழுப்பி விட்டு அவர்களாகவே கலைந்து சென்று விட்டனர்.

Next Story