மும்பையில் மழை வெள்ள பாதிப்பு: 2-வது நாளாக 30 விமானங்கள் ரத்து; 118 சேவைகள் தாமதம்
கொட்டி தீர்த்த கனமழையால் மும்பையில் 2-வது நாளாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று 30 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
மும்பை,
டெல்லியை அடுத்து நாட்டின் 2-வது பரபரப்பான விமான நிலையம் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு தினசரி சுமார் ஆயிரம் விமானங்கள் வந்து செல்கின்றன. இந்தநிலையில், நேற்று முன்தினம் மும்பையை புரட்டி எடுத்த பேய் மழை காரணமாக விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கனமழையால் நேற்று முன்தினம் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் பெரும்பாலானவை இண்டிகோ நிறுவன விமானங்கள் ஆகும். மழையின் காரணமாக ஊழியர்கள் பலர் பணிக்கு வராததால் அந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது. இதுதவிர 455 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
மழை நின்ற நிலையிலும் வெள்ள பாதிப்பு காரணமாக 2-வது நாளாக நேற்று மும்பையில் விமான சேவை பாதிக்கப்பட்டு இருந்தது.
நேற்று மும்பை வரும் 14 விமானங்கள் மற்றும் 16 வெளிநாடு செல்லும் விமானங்கள் என 30 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 118 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இவற்றில் 86 விமானங்கள் மும்பையில் இருந்து புறப்பட்டவை ஆகும். விமானங்கள் ரத்து மற்றும் தாமதத்தின் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
10 மணி நேரம் விமானத்துக்குள் தவிக்கவிடப்பட்ட பயணிகள்; விசாரணை நடத்தப்படும் என அறிவிப்பு
மும்பையில் கனமழையை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7.55 மணிக்கு ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய இண்டிகோ விமானம் ஒன்று சுமார் 10 மணி நேர தாமதத்திற்கு பிறகு நேற்று அதிகாலை 6 மணிக்கு தான் புறப்பட்டு சென்றது.
அது வரையிலும் பயணிகள் வலுக்கட்டாயமாக அந்த விமானத்துக்குள்ளேயே இருக்க வைக்கப்பட்டு இருந்ததாகவும், இரவு உணவு கூட தரவில்லை என்றும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story