தொடர் கனமழை எதிரொலி: குடகில் மேலும் ஒருநாள் ‘ரெட் அலார்ட்’ நீட்டிப்பு


தொடர் கனமழை எதிரொலி: குடகில் மேலும் ஒருநாள் ‘ரெட் அலார்ட்’ நீட்டிப்பு
x
தினத்தந்தி 5 Sep 2019 11:00 PM GMT (Updated: 5 Sep 2019 10:48 PM GMT)

குடகு மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மேலும் ஒருநாள் ‘ரெட் அலார்ட்’ நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால், மடிகேரி-மங்களூரு சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குடகு, 

கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஆகஸ்டு) தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. குறிப்பாக பெலகாவி, தட்சிண கன்னடா, குடகு மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில், தொடர்ந்து கொட்டிய மழையால் காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காவிரி ஆற்றங்கரையையொட்டி உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. ஏராளமான வீடுகளும் இடிந்து விழுந்தன. மேலும் மண்சரிவால் பல்வேறு வீடுகள் இடிந்ததுடன், சாலைகளும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

கடந்த சில தினங்களாக மழை பெய்யவில்லை. இதனால் குடகு மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக குடகு மாவட்டத்தில் இடைவிடாது பலத்த மழை கொட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து குடகு மாவட்டத்தில் நேற்று முன்தினமும் (4-ந்தேதி), நேற்றும் (5-ந்தேதி) ‘ரெட் அலார்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த மாதமும் குடகில் சில நாட்கள் ‘ரெட் அலார்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

குடகில் ‘ரெட் அலார்ட்’ விடுக்கப்பட்ட நிலையில் கடந்த 3 நாட்களாக விடிய, விடிய தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இந்த தொடர் கனமழை காரணமாக குடகு மாவட்டத்தில் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த மழையால் குடகில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடியது. குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துகொண்டது. இந்த நிலையில் குடகில் மேலும் சில நாட்கள் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் குடகில் மேலும் ஒருநாள் ‘ரெட் அலார்ட்’ நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதாவது இன்றும் (வெள்ளிக்கிழமை) குடகு மாவட்டத்தில் ‘ரெட் அலார்ட்’ அமலில் இருக்கும். இதனால் மலை அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடமாற்றப்பட்டு வருகிறார்கள்.

குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, நெல்லுதுக்கேரி, பெட்டதகாடு, பரடி, குய்யா, மால்தாரே, கட்டதல்லா ஆகிய பகுதிகளில் இடைவிடாது தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் அந்தப்பகுதியில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதன்காரணமாக அந்தப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் பாகமண்டலா பகுதியில் பெய்து வரும் கனமழையால், காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோல, ஹாரங்கி அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக காவிரி ஆற்றங்கரை மற்றும் ஹாரங்கி அணையையொட்டி உள்ள கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

குடகில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், மடிகேரி-மங்களூரு சாலையில் ஜோடுபாலா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் (ஆகஸ்டு) மழை பெய்தபோது ஜோடுபாலா பகுதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பல நாட்கள் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த மண்சரிவு சரி செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், போக்குவரத்து தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மடிகேரி-மங்களூரு சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்தப்பகுதியில் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மண்ணை அகற்றும் பணி நடந்து வருகிறது. குடகில் மீண்டும் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

Next Story