ஆசிரியர்களால் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்; முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு


ஆசிரியர்களால் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்; முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு
x
தினத்தந்தி 6 Sept 2019 5:30 AM IST (Updated: 6 Sept 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர்களால் தான் நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா பேசினார்.

பெங்களூரு, 

கர்நாடக அரசின் கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்துகொண்டு விழாவை தொடங்கிவைத்து பேசியதாவது:-

ஆசிரியர்களின் பிரச்சினையை தீர்க்க நான் தயாராக உள்ளேன். பணி இடமாறுதல் விவகாரம் குறித்து கல்வித்துறை மந்திரி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சூளுரைத்து உள்ளார்.

அதனால் ஆசிரியர்கள் தங்களின் கடமையை மறக்கக்கூடாது. ஆசிரியர்கள் என்றால் நான்கு வார்த்தைகளை கற்பிப்பது அல்ல. மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயித்து அவர்களின் வாழ்க்கையை நடத்த வழிகாட்டுபவர்கள். நல்ல ஆசிரியர்களால் தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும்.

கிராமப்புறங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், கிராமங்களின் வளர்ச்சியிலும் பங்கெடுக்க வேண்டும். குரு இல்லாமல் படித்தால் குறிக்கோளை அடைய முடியாது. தாய் இல்லாவிட்டால் குழந்தைகள் அனாதைகள் ஆகிவிடுகின்றன. அதே போல் தான், ஆசிரியர்கள் இல்லா விட்டால் அறிவாளிகளை உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

ஆசிரியர்கள் இந்த சமுதாயத்தின் மிகப்பெரிய சொத்து. ஆசிரியர்களால் தான் நல்ல சமுதாயத்தை படைக்க முடியும். ஆசிரியர்கள் தங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால், சமுதாயத்தில் இருக்கும் தீமைகள் நீங்கும். நல்ல கல்வி எங்கு கிடைக்கிறதோ அங்கு எந்த பிரச்சினைகளும் இருப்பது இல்லை. இதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா பேசினார்.

அதைத்தொடர்ந்து கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பேசியதாவது:-

ஆசிரியர்கள் கட்டாய பணி இடமாறுதலை அடுத்த ஆண்டு (2020) முதல் ரத்து செய்வோம். இதுதொடர்பாக சட்டத்திருத்தம் செய்யப்படும். இதுகுறித்து முடிவு எடுக்க ஒரு குழு அமைக்கப்படும். கட்டாய பணி இடமாறுதல் முறையை முந்தைய அரசு ஏன் கொண்டு வந்தது என்று தெரியவில்லை. கட்டாய ஓய்வு மற்றும் கட்டாய தண்டனை என்பதை நான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் கட்டாய பணி இடமாறுதலை நான் கேள்விபட்டது இல்லை.

பணி இடமாறுதலில் தற்போது உள்ள எல்லா குழப்பங்களுக்கும் தீர்வு காணப்படும். ஆசிரியர்கள் பணி இடமாறுதல் செய்யும் பணி நாளை (அதாவது இன்று) முதல் தொடங்கும். நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியையின் மகன் என்ற முறையில், உங்களின் பிரச்சினைகள் என்ன என்பது எனக்கு தெரியும். ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்க்க நான் தீவிர முயற்சி மேற்கொள்வேன். ஊழலுக்கு இடம் கொடுக்க மாட்டேன். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஆசிரியர்கள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் நல்லாசிரியர்களுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா விருது வழங்கி கவுரவித்தார். 

Next Story