சென்னையில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சந்தை பாரம்பரிய பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது


சென்னையில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சந்தை பாரம்பரிய பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 4:02 PM GMT)

மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சந்தையில் பாரம்பரிய பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது.

சென்னை,

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் வேளாண் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இயற்கையான முறையில் ரசாயன கலப்பு இன்றி மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள், தயார் செய்யப்பட்ட கைவினை பொருட்கள், உணவு பண்டங்கள் இந்த சந்தையில் இடம் பெற்றுள்ளன.

பாரம்பரிய அரிசி வகைகள், காய்கறிகள், பழங்கள், உலர் பழங்கள், தானியங்கள், செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய், நெய், பால் பொருட்கள், கையினால் நெய்யப்பட்ட துணிப்பைகள், தினை பண்டங்கள், கருப்பட்டி, பனை ஓலை அலங்கார பொருட்கள், இலவம் பஞ்சில் செய்யப்பட்ட அலங்கார பொருட்கள், சுக்கு மல்லி, பிரண்டை பொடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 8-வது மண்டலம் சார்பில் காய்கறி கழிவுகளால் தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் விற்பனை செய்யப்படுகிறது. மண்டல அதிகாரியும், உதவி கமிஷனருமான கே.பி.விஜயகுமார் ஏற்பாட்டில் துப்புரவு ஆய்வாளர் பவானி தலைமையிலான குழுவினர் இயற்கை உரம் விற்பனை செய்கின்றனர். ஒரு கிலோ இயற்கை உரம் துணிப்பை பொட்டலத்தில் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த உரம் இயற்கையான முறையில் செடி, கொடிகள், மரங்களின் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் இருக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் பொதுமக்கள் ஆர்வத்தோடு இயற்கை உரத்தை போட்டிப் போட்டு வாங்கிச் செல்கிறார்கள். இடைத்தரகர்கள் இல்லாமல் பெண்கள் மட்டுமே நேரடியாக விற்பனை செய்கின்றனர். சந்தை விலையை விடவும் பொருட்கள் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் இந்த சந்தைக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். சந்தையில் அமைக்கப்பட்டுள்ள 50 அரங்குகளிலும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதத்தால் தயாரித்த மேஜைகள் இடம் பெற்றுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்தின் செயல் அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது:-

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 நாட்கள் சந்தை நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் இனிமேல் மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை, சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை என 3 நாட்கள் நடத்தப்படும்.

அதன்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை (நாளை) வரை நடைபெற உள்ள சந்தையில் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை விற்பனையாகும் என்றும், 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரையிலும் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். சனிக்கிழமை (இன்று) டாக்டர் சிவராமன் சிறப்புரையாற்றுகிறார். கருப்பட்டி, தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story