வெள்ள நிவாரண பணிக்கு கூடுதல் நிதி கேட்டு பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை விடுப்பார் - மந்திரி ஆர்.அசோக் பேட்டி


வெள்ள நிவாரண பணிக்கு கூடுதல் நிதி கேட்டு பிரதமரிடம் எடியூரப்பா கோரிக்கை விடுப்பார் - மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 7 Sept 2019 4:15 AM IST (Updated: 6 Sept 2019 11:48 PM IST)
t-max-icont-min-icon

வெள்ள நிவாரண பணிகளுக்கு கூடுதல் நிதி வழங்குமாறு பெங்களூருவில் பிரதமர் மோடியிடம் எடியூரப்பா கோரிக்கை விடுப்பார் என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் எந்த தடையும் ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள கொய்னா அணையில் மீண்டும் அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால், கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணா ஆற்று படுகையில் வசிக்கும் மக்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் நிவாரண பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். பிரதமர் மோடி இன்று (அதாவது நேற்று) இரவு பெங்களூரு வருகிறார். நாளை (இன்று) அவரிடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா எடுத்து கூறுவார். மேலும் பிரதமரிடம், நிவாரண பணிகளுக்கு அதிக நிதி உதவி வழங்குமாறு முதல்-மந்திரி எடியூரப்பா கோரிக்கை விடுப்பார்.

இதற்கு முன்பு எடியூரப்பா கைது செய்யப்பட்டபோது காங்கிரசார் மகிழ்ச்சி அடைந்தனர். டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்ட விஷயத்தில் பா.ஜனதாவை குறை கூறுவது சரியல்ல. இந்த விஷயத்தில் பா.ஜனதா பழிவாங்கும் அரசியல் செய்யவில்லை. கோர்ட்டில் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு மந்திரி ஆர்.அசோக் கூறினார். 

Next Story