தாராபுரம்,வெள்ளகோவிலில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தாராபுரம்,வெள்ளகோவிலில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2019 4:15 AM IST (Updated: 7 Sept 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம்,வெள்ளகோவிலில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தாராபுரம்,

தாராபுரத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் 9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் ராஜு தலைமை தாங்கினார். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கண்ணன், செந்தில், ராஜாமணி, அழகர்சாமி மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் ரீட்டா, மேகவர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, தொடக்க கல்வியை அழிக்கும் அரசாணை 145-ஐ ரத்து செய்ய வேண்டும். ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும், தேசிய கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கை 17-பி மற்றும் பொய் வழக்கை திரும்ப பெறவேண்டும்.

மாநில ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிரமணியன் ஓய்வுபெறும் நாளில் வழங்கப்பட்ட, தற்காலிக பணிநீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும். உயர்மட்டக்குழு உறுப்பினரும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான மா.ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்ட, தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

வெள்ளகோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களின் மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் காவல் துறையால் அரசு ஊழியர்கள் மீது தொடர்ந்துள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், தேசிய புதிய கல்விக்கொள்கை 2019-ஐ ரத்து செய்யக்கோரியும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளோடு இணைப்பதை கைவிடக்கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் கூட்டணியை சேர்ந்த பொறுப்பாளர்கள் செ.பாலசுப்பிரமணியம், வ.பாபு. கோ.பிரபாகரன், ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களின் நிர்வாகி செந்தில்குமார் உள்பட திரளான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story