ப.சிதம்பரம் கைதை கண்டித்து மோடி உருவப்படத்தை கிழித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


ப.சிதம்பரம் கைதை கண்டித்து மோடி உருவப்படத்தை கிழித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Sept 2019 5:00 AM IST (Updated: 7 Sept 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் மோடி உருவப்படத்தை கிழித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை பாரதீய ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான திருச்சி அருணாசலம் மன்றம் முன்பு நேற்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ், ஆர்.சி.பாபு, சரவணன், மாவட்ட செயலாளர்கள் சிவா, உறந்தை செல்வம், பொருளாளர் ராஜா நசீர், முன்னாள் மேயர் சுஜாதா, பொதுச்செயலாளர் விக்டர் மற்றும் திருச்சி வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பிரதமர் நரேந்திரமோடியின் உருவப்படத்தை ஹிட்லர்போல சித்தரித்து கையில் ஏந்தி நின்றனர். மேலும் அவரது உருவப்படத்தை கிழித்தெறிந்து, ஜனநாயகத்தை வஞ்சிப்பதுபோல மோடி அரசு செயல்படுவதாகவும், எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையாக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கோ‌‌ஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி திருச்சி வேலுச்சாமி பேசுகையில், மோடி வாழ்க என்றும், மத்திய அரசுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டார். இதனால், காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதற்கு விளக்கம் அளித்து பேசிய அவர், ‘நாடாளுமன்ற பொதுத்தேர்தலின்போது பொய் வழக்கு போட்டு ப.சிதம்பரத்தை கைது செய்வார்கள் என்று பொதுமக்களிடம் தெரிவித்தோம். அதுபோலவே பாரதீய ஜனதா அரசு நடந்து கொண்டுள்ளது. இதன் மூலம் சோர்வாக இருந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்களை புத்துணர்ச்சி அடைய செய்துள்ளது. அதற்காகவே பாரதீய ஜனதா அரசுக்கு நன்றி என்றேன். இப்போது நாடு முழுவதும் காங்கிரசார் கொந்தளித்து உள்ளனர்’ என்றார்.

Next Story