காடுகளில் யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடுவதற்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


காடுகளில் யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடுவதற்கு தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 Sept 2019 4:00 AM IST (Updated: 7 Sept 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காடுகளில் யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடுவதற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

இந்திய விவசாயிகள் சங்கத்தின் தமிழக கிளை பொதுச் செயலாளர் தனபதி மற்றும் பலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1974-ம் ஆண்டு வரை சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி இருந்தது. இங்கிருந்து உருவான சிற்றாறுகள், நீரூற்றுகள் மூலம் பல்வேறு கிராமங்களின் நீர்நிலைகளுக்கு தண்ணீர் கிடைத்து வந்தது. அதன்பின்பு இந்த வனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக யூகலிப்டஸ், முந்திரி மரங்கள் நடப்பட்டு, வணிக ரீதியிலான காடுகளாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த மரங்கள் நீடித்து நிற்பதில்லை. சில வருடங்களுக்கு ஒருமுறை வெட்டப்பட்டு, புதிய செடிகள் நடப்படுகின்றன. இதனால் வனத்தை நம்பி வாழும் கரடி, மான், பாம்பு, பறவை உள்ளிட்ட உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. யூகலிப்டஸ், முந்திரி மரங்கள் நிலத்தடி நீரையும் உறிஞ்சிவிடுகின்றன.

இந்தநிலையில் யூகலிப்டஸ் மரங்களுக்கு இடையே சிறு, சிறு தடுப்பணைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் சிற்றாறுகள், நீரூற்றுகளில் இருந்து கிராம குளங்களுக்கு வரும் தண்ணீர் தடுக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் வனப்பகுதியில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் வரும் நீர்வழித்தடங்களில் உள்ள மண் அனுமதியின்றி கொள்ளையடிக்கப்படுகிறது. இதனால் குளங்களுக்கு தண்ணீர் வருவது தடைபட்டு விவசாயமும், குடிநீர் தேவையும் பாதிக்கப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அங்குள்ள வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வேண்டும் என்றும், புதிதாக மரக்கன்றுகள் நடுவதற்கு தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், புதுக்கோட்டை மாவட்ட வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரக்கன்றுகள் நடுவதற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணையை அக்டோபர் மாதம் 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story