வேப்பந்தட்டை அரசு கல்லூரி முன்பு அனைத்து பஸ்களும் நின்று செல்ல கோரி மாணவர்கள் சாலை மறியல்
வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்பு அனைத்து பஸ்களும் நின்று செல்ல கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை- கிருஷ்ணாபுரம் இடையே வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிக்கு முன்பாக பஸ்நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் சென்ற அரசு பஸ் ஒன்று பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறிது தூரம் சென்று டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது பஸ் ஏறுவதற்காக நின்றிருந்த மாணவர்கள் ஓடிச்சென்று பஸ் ஏற முயன்றனர். அப்போது கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ஹரிசுதன் என்ற மாணவன் கால் தவறி கீழே விழுந்து காயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகள் பஸ்சை மறித்து, கல்லூரி முன்பு அனைத்து பஸ்களும் நின்று மாணவர்களை ஏற்றி செல்ல வேண்டும். கல்லூரி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திரென பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாவூர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் சாலை மறியலை கைவிடாமல், தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறங்களிலும் பஸ்கள், வேன்கள், லாரிகள் என வாகனங்கள் அணிவகுத்து நின்றன. சாலையோரத்தில் இருந்த வயல் வெளிகளில் இறங்கி இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கடந்துசெல்ல முயன்றனர். அப்போது மாணவர்கள் அவர்களும் கடந்து செல்ல முடியாத வகையில் முட்களை வெட்டி போட்டு மறியல் செய்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
அப்போது பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் கூறுகையில், மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்த பல்வேறு வகைகள் உள்ளது. குறிப்பாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கையிலெடுக்க வேண்டும். அதாவது உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டம் போன்ற வகைகளில் ஒன்றை தேர்வு செய்து மாணவர்கள் போராட வேண்டும். தற்போது ஏராளமான பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதுபோன்ற சாலை மறியல் போராட்டங்களை நடத்தக்கூடாது என மாணவர்களின் பெற்றோர்களும் அவர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என்றார். மாணவர்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போலீசார் போக்குவரத்தை மாற்றி வேப்பந்தட்டை, வெண்பாவூர், கிருஷ்ணாபுரம் வழியாக பஸ்களை திருப்பி விட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தானாக கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story