வெள்ளியணை அருகே, மேற்கு வங்காளத்தை சேர்ந்த புதுப்பெண் தற்கொலை


வெள்ளியணை அருகே, மேற்கு வங்காளத்தை சேர்ந்த புதுப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 6 Sep 2019 10:30 PM GMT (Updated: 6 Sep 2019 8:47 PM GMT)

வெள்ளியணை அருகே மேற்கு வங்காளத்தை சேர்ந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

வெள்ளியணை, 

கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள காக்காவாடி சடையப்பகவுண்டன்புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கொசுவலை உற்பத்தி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சைபுதீன் (வயது 28) என்பவர் டெய்லராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாதுமா மாண்டேல் (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மனைவியுடன் சடை யப்பகவுண் டன்புதூர் பகுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

இந்தநிலையில் சைபுதீன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்திற்கு சென்று வருவதாக மனைவிடம் கூறிவிட்டு சென்றுவிட்டார். தினந்தோறும் செல்போன் மூலம் மனைவிடம் பேசி வந்தார். இந்தநிலையில் சைபுதீன் நேற்று முன்தினம் இரவும் மனைவியிடம் பேசுவதற்காக செல்போனில் அழைத்துள்ளார். அழைப்பு சென்றுகொண்டே இருந்தபோதிலும் மனைவி எடுத்து பேசவில்லை. இதனால் அச்சமடைந்த சைபுதீன் பக்கத்து வீட்டில் வசிக்கும் பென்னி என்பவருக்கு போன்செய்து தனது வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பென்னி சென்று பார்த்தபோது சாதுமா மாண்டேல் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து உடனடியாக வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் பசுபதி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் விட்டத்தில் சாதுமா மாண்டேல் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து கணவர் சைபுதீனுக்கும், சாதுமா மாண்டேலின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காளத்திலிருந்து அவர்கள் வந்தவுடன் விசாரணை நடத்திய பிறகே சாதுமா மாண்டேலின் தற்கொலைக் கான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story