பாப்புலர் முதலியார் வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பாப்புலர் முதலியார் வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 7 Sept 2019 3:30 AM IST (Updated: 7 Sept 2019 2:17 AM IST)
t-max-icont-min-icon

பாப்புலர் முதலியார் வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

நொய்யல், 

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி தளவாபாளையம் வழியாக பாப்புலர் முதலியார் வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க் காலின் இரு பக்கத்திலும் வசிக்கும் சிலர் கரையை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டி பல ஆண்டு களாக பயன்படுத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தளவாபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 2017-ம் ஆண்டு பாப்புலர் முதலியார் வாய்க்கால் கரையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கூறி உத்தரவிட்டனர். தொடர்ந்து இந்த உத்தரவுக்கு தடைகேட்டு சம்பந்தப்பட்டவர்கள் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்தனர். அந்த மனுவை கடந்த 2018-ம் ஆண்டு தள்ளுபடி செய்ததுடன் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மதுரை ஐகோர்ட்டு உறுதி செய்தது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற் கிடையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடந்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தள்ளிப்போனது.

தற்போது மீண்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள சம்பந்தப்பட்டவர் களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதையடுத்து நேற்று காலை பொதுப்பணித்துறை ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட பரா மரிப்புதுறை உதவி செயற்பொறியாளர் சரவணன் தலைமையில், உதவி பொறியாளர் ஸ்ரீதர், புகழூர் தாசில்தார் ராஜசேகரன், புஞ்சை புகழூர் பேரூராட்சி செயல்அலுவலர் சக்திவேல் கொண்ட குழுவினர் வந்தனர். பின்னர் பாப்புலர் முதலியார் வாய்க்கால் கரையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அகற்றினர். இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

Next Story