மணல் லாரியை விடுவிக்க பேரம் பேசியதாக புகார்: பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணி நீக்கம்
பிடிபட்ட மணல் லாரியை விடுவிக்க பேரம் பேசியதாக எழுந்த புகாரையடுத்து பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குமரி மாவட்ட போலீசாரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதே சமயத்தில் சில போலீசார் லஞ்சம் வாங்கி கொண்டு மணல் கடத்தலுக்கு துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் அப்போதைய மணல் கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், போலீஸ் ஏட்டுகள் ரமேஷ், ஜோஸ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. இந்த லாரியை செந்தில்வேல் மற்றும் ஏட்டுகள் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது, லாரியில் மணல் கடத்தி சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் நடவடிக்கை எடுக்காமல் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்துக்கு லாரியை கொண்டு சென்றனர். அப்போது அந்த போலீஸ் நிலையத்துக்கு வனிதா ராணி என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அவரும் உடனடியாக வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடித்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் வனிதா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், ஏட்டுகள் ரமேஷ், ஜோஸ் ஆகியோர் மணல் கடத்தலுக்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்க லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்க முயன்றதாக தெரிகிறது.
அதே சமயத்தில் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த லாரி உரிமையாளரிடமும் அவர்கள் பேரம் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் லாரி உரிமையாளர் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசிடம் புகார் செய்தார். பின்னர் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் வனிதா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், ஏட்டுகள் ரமேஷ், ஜோஸ் ஆகியோர் மணல் கடத்தலுக்கு லஞ்சம் வாங்க பேரம் பேசியது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 4 பேரையும் பணிநீக்கம் செய்து உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தற்போது வனிதா ராணி விருதுநகர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராகவும், செந்தில்வேல் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகவும், ஏட்டு ரமேஷ் களியக்காவிளை போலீஸ் நிலையத்திலும், ஏட்டு ஜோஸ் குளச்சல் போலீஸ் நிலையத்திலும் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story