கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் தவற விட்ட நகை உரியவரிடம் ஒப்படைப்பு
கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் தவற விட்ட நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவில்பட்டி,
கடலூரைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் யுவராஜ் (வயது 31). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் நேற்று காலையில் கடலூருக்கு திரும்பி செல்வதற்காக, கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது அவர்கள், குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி புறப்பட்டனர். அவர்கள் நகை, மடிக்கணினி, வெளிநாட்டு பணம், துணிகள் வைத்திருந்த ஒரு பையை ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் மறதியாக விட்டு சென்றனர். பின்னர் அவர்கள் ரெயிலில் சென்றபோது, ஒரு பையை மறதியாக பிளாட்பாரத்திலேயே விட்டு வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து யுவராஜ், மதுரை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் கோவில்பட்டி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கோவில்பட்டி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் ரோந்து சென்ற ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அரியநாயகம் மற்றும் போலீசார், அங்கு பிளாட்பாரத்தில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்தனர். அந்த பையில் 3½ பவுன் தங்க சங்கிலி, மடிக்கணினி, ரூ.2 ஆயிரம் மதிப்பிலான வெளிநாட்டு பணம், துணிகள் இருந்தது.
தொடர்ந்து யுவராஜ் கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் ரெயில்வே போலீசார் விசாரித்து, உறுதிப்படுத்திய பின்னர் நகை, மடிக்கணினி, வெளிநாட்டு பணத்துடன் கூடிய பையை ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story