இமானுவேல்சேகரன் நினைவு தின நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும் - கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவு


இமானுவேல்சேகரன் நினைவு தின நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும் - கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவு
x
தினத்தந்தி 7 Sept 2019 4:00 AM IST (Updated: 7 Sept 2019 2:39 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் நடைபெற உள்ள இமானுவேல்சேகரன் நினைவு தின நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை,

பரமக்குடியில் வருகிற 11-ந் தேதி இமானுவேல்சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப் படுகிறது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வருகிற 11-ந் தேதி அன்று தியாகி இமானுவேல்சேகரன் நினைவு நாள் விழா நடைபெறுகிறது. இந்த விழாவின் போது சிவகங்கை மாவட்டத்திலில் இருந்து செல்கின்றவர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தந்தப் பகுதி பொறுப்பாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை கொண்டு பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களை ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் திட்ட மிட்டபடி சென்று வரநடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு போக்குவரத்து கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அந்தந்த பகுதிக்கு செல்லும் பஸ்கள் காலை 8மணி முதல் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இமானுவேல்சேகரன் நினைவிடத்திற்கு செல்லக்கூடிய பொதுமக்கள் திட்டமிட்டப்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்துகளில் சென்று அதே வாகனத்தில் சரியான நேரத்தில் வரும் வகையில் நேரங்களை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் ஒலிபெருக்கி மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு அனுமதி கிடையாது. அதற்கேற்ப நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். விழாவிற்கு செல்ல கூடுதல் பஸ்கள் தேவைப்பட்டால் அந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களுக்கு அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் அனுமதி சீட்டும், அதற்குரிய வழித்தடமும் வழங்கப்படும்.

மேலும் அனுமதிக்கப்பட்ட பகுதிகள் வழித்தடத்தில் மட்டுமே நினைவு நாள் நிகழ்ச்சிக்கு சென்று வரவேண்டும். நிகழ்ச்சியை மிக சிறப்பாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ராமபிரதீபன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அப்துல்கபூர், அருண், கார்த்திகேயன், மோகன்தம்பிராஜ், அண்ணாத்துரை மற்றும் தாசில்தார்கள், அரசு அலுவலர்கள், அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story