மங்கலம்பேட்டையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் - சில்வர் பீச்சில் கரைக்கப்பட்டன
மங்கலம்பேட்டையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கடலூர் சில்வர் பீச்சில் கரைக்கப்பட்டன.
விருத்தாசலம்,
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 2-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் மங்கலம்பேட்டை பகுதியில் மட்டும் 77 சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப் பட்டது. சதுர்த்தி விழா முடிந்து 5-வது நாளான நேற்று விநாயகர் சிலைகளை கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள சில்வர் பீச் கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக மினி லாரி, ஆட்டோக்களில் விநாயகர் சிலைகள் ஏற்றப்பட்டு ஊர்வலமாக மங்கலம்பேட்டை தேரடி வீதியில் உள்ள விநாயகர் கோவில் முன்பு கொண்டு வரப்பட்டது.
அங்கு விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடை பெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஓம் கணேசா...ஜெய் கணேசா... என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அங்கிருந்து காலை 9.45 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமார் இந்த ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
ஊர்வலம் மங்கலம்பேட்டை கடைவீதி, புது நெசவாளர் தெரு, மேலவீதி, கீழவீதி, பள்ளிவாசல் தெரு, வாணியர் தெரு, வைத்தியர் தெரு, தெற்குதெரு, சந்தைப்பேட்டை தெரு, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக உளுந்தூர்பேட்டை மெயின் ரோட்டுக்கு மதியம் 12 மணி அளவில் வந்தடைந்தது.
இதையடுத்து மசூதி அமைந்திருக்கும் இடத்தை ஊர்வலம் அமைதியாக கடந்து சென்றது. இதை தொடர்ந்து மீண்டும் தேரடி வீதியில் உள்ள விநாயகர் கோவிலை ஊர்வலம் வந்தடைந்தது. ஊர்வலத்தையொட்டி டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் தலைமையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோர் மேற்பார்வையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மாலை 4 மணி அளவில் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கடலூர் சில்வர் பீச் கடலில் கரைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டது. அங்கு போலீஸ் பாதுகாப்புடன் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன.
Related Tags :
Next Story