கலை அறிவியல் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் ஆதிதிராவிட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு


கலை அறிவியல் உள்பட அனைத்து படிப்புகளுக்கும் ஆதிதிராவிட மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 7 Sept 2019 5:15 AM IST (Updated: 7 Sept 2019 4:59 AM IST)
t-max-icont-min-icon

ஆதிதிராவிட மாணவ, மாணவிகளின் கலை மற்றும் அறிவியல் படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்று அமைச்சர் கந்தசாமி அறிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் கந்தசாமி வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

*ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகள், மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள், துணை படிப்புகள், என்ஜினீயரிங் மற்றும் துணை படிப்புகளுக்கு கல்லூரி கட்டணத்தை முழுமையாக இந்த ஆண்டு முதல் அரசே ஏற்கும். இதற்காக ஆண்டு ஒன்றுக்கு ரூ.6 கோடி கூடுதல் செலவாகும்.

*பாகூர் மற்றும் கரையாம்புத்தூரில் தலா ஒரு மாணவியர் விடுதி ரூ.5 கோடி செலவில் கட்டப்படும்.

*அரசு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் மற்றும் மாணவிக்கு தற்போது வழங்கப்படும் ரூ.30 ஆயிரம் ஊக்கத்தொகை ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்படும்.

*ஆதிதிராவிட பெண்களின் திருமண நிதி ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.

*இலவச துணிகளை கூட்டுறவு நெசவாளர் சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்ய ஆவன செய்யப்படும்.

*இலவச வேட்டி, சேலை திட்டம் தமிழ் புத்தாண்டிற்கும் விரிவுபடுத்தப்பட்டு ஆண்டுக்கு இருமுறை வேட்டி, சேலை வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

*பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிவாரண உதவி திட்டம் உருவாக்கப்படும்.

* 70 வயது முதல் 79 வயது வரையிலான முதியவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.1.75 கோடி மாதத்துக்கு செலவாகும்.

*தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் புதுச்சேரி இளைஞர்களுக்கு குறைந்தபட்சம் 60 சதவீத வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.

*அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கம் வாரியமாக மாற்றப்படும்.

*சிறுநீரகம், கல்லீரல் கோளாறு, புற்றுநோய், இதயநோய் மற்றும் சிலிகோசிஸ் ஆகியவற்றை பரிசோதனை செய்து கண்டறிய கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.75 ஆயிரம் வரை வழங்கப்படும்.

*கருச்சிதைவு ஏற்படும் பெண் கட்டுமான தொழிலாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்.

*சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கவும், நலத்திட்டங்களை செயல்படுத்தவும் அரசு உத்தேசித்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

Next Story